PUBLISHED ON : மார் 05, 2024 12:00 AM

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன்: தமிழகத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியினரை, பாஜ., தலைவர் அண்ணாமலை, மிகவும் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். அரசியலில் இதுபோன்ற விமர்சனங்களை, இனி அவர் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால், எதிர்க்கட்சியினர் சேர்ந்து, அவரை திருத்த வேண்டி வரும்.
டவுட் தனபாலு: நீங்க எல்லாம் சேர்ந்து திருத்த, அவர் என்ன பரீட்சை பேப்பரா...? அண்ணாமலை, எந்த தலைவரையும் தனிப்பட்ட முறையில் நாகரிக குறைவாக விமர்சிக்கவில்லையே... ஆளுங்கட்சியின் கொள்கைகள், மக்கள் பாதிக்கப்படுற திட்டங்களை துணிச்சலாக தட்டிக் கேட்பது, உங்களுக்கு வேப்பங்காயா கசக்கிறது என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தென்சென்னை லோக்சபா தொகுதியில் களமிறங்க திட்டமிட்டுள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன், கட்சி வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னதாகவே, தன் பிரசாரத்தை துவக்கி உள்ளார்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., வுல இன்னும் கூட்டணியே முடிவாகலை... ஒருவேளை, கூட்டணிக்கு வர்ற கட்சி, தென்சென்னை தொகுதியை கேட்டு வாங்கிட்டா, ஜெயவர்தன் எங்க போவாரு... ஜெ., காலத்துல இப்படி எல்லாம் நடக்குமா... பொதுச் செயலர் பழனிசாமி கட்டுப்பாட்டில் தான் அ.தி.மு.க., இருக்குதா என்ற, 'டவுட்'தான் வருது!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஆறு தேர்தலில் தனித்து போட்டியிட்டு இருக்கிறேன். அங்கீகாரம் பெறுவதற்குள், சின்னத்தை பறித்து வீட்டில் இருந்து துாக்கி எறிந்துள்ளீர்கள். என்னை போல, ஸ்டாலின், பழனிசாமி, அண்ணாமலையை தனியாக நிற்க சொல்லுங்கள் பார்க்கலாம். யாருக்கும் துணிவு இல்லை.
டவுட் தனபாலு: தொடர்ந்து, ஆறு தேர்தல்ல தனித்து போட்டியிடுவது உங்களது துணிச்சல் இல்லை... உங்களை நம்பி, வேட்பாளர்களா களம் இறங்குறாங்க, பாருங்க... அவங்க துணிச்சலை தான், 'டவுட்'டே இல்லாம பாராட்டணும்!

