PUBLISHED ON : மார் 09, 2024 12:00 AM

ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., எம்.பி., - டி.ஆர்.பாலு: மோடி சுட்ட வடை என, அனைவருக்கும் துண்டு பிரசுரம் மற்றும் வடை இங்கு வழங்கப்பட்டது. இதை பார்த்து நான் ரசித்தாலும், என் நண்பர் பிரதமர் மோடியை, இவ்வாறு சித்தரிக்கக் கூடாது. நான் மிகவும் நேசிக்கும் நண்பர் அவர். அவர், வாயால் வடை சுடுவதாக பார்லிமென்டில் பேசியுள்ளோம்.ஆனால், பொது வெளியில் பேசி, இப்படி அவமானப்படுத்த வேண்டாம்.
டவுட் தனபாலு: ஜனநாயகத்தின் கோவிலான பார்லிமென்டில் பேசியதை, பொது வெளியில் பேச வேண்டாம்னு சொல்லி, 'சேம் சைடு கோல்' போடுறீங்களே... அடுத்தும் மோடி ஆட்சியே வர போறதால, இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வருமேன்னு இப்பவே உஷார் ஆகுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
திரிணமுல் காங்., கட்சி தலைவரான, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: சந்தேஷ்காலி குறித்தும், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், பா.ஜ., தலைவர்கள் புரளியை பரப்பி வருகின்றனர். அதுவே பா.ஜ., ஆளும் மாநிலங்களில், பெண்களுக்கு கொடுமை நடந்தால் அமைதி காக்கின்றனர்.
டவுட் தனபாலு: இல்லாத ஒன்றை இருப்பதாக பரப்புவதுதான் புரளி... உங்களது கருத்தை பார்த்தால், சந்தேஷ்காலியில் எந்த பெண்களுக்கும் எந்த துன்புறுத்தலும் நடக்கலைன்னு சொல்றீங்களா...? அங்க, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த, ஷாஜகான் ஷேக் என்ற நபரே கற்பனை பாத்திரம்னு சொன்னாலும் சொல்லிடுவீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., - வி.என்.ரவி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உற்றார், உறவினர் இருந்து அன்போடு உபசரித்திருந்தால், இன்னும் 10 ஆண்டுகள் அவர் வாழ்ந்திருப்பார். போயஸ் கார்டன் உள்ளே நுழைந்ததும் அவர் தனியாளாகி விட்டார். அதனாலேயே, அவர் நீண்ட நாள் வாழாமல் இறந்து போனார்.
டவுட் தனபாலு: ஜெ., தன் கட்சியில் இருந்த ஒரு கோடி தொண்டர்கள் தான், தன் சொந்தங்கள்னு அடிக்கடி சொல்வார்... அவரால பதவிக்குவந்த உங்களை போன்ற பலரும் நினைச்சிருந்தால், ஜெ.,வை எப்பவோ காப்பாற்றி இருக்கலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!