PUBLISHED ON : மார் 13, 2024 12:00 AM

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: நாட்டை ஆண்ட கட்சி காங்கிரஸ். அனைத்து மாநிலங்களையும் ஆண்டது. அன்று மாநில கட்சிகளுக்கு, காங்கிரஸ் கட்சி கூட்டணியில், சீட் பிரித்து கொடுத்தது. இன்று, மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் வாங்குகிறது. 20 - 30 இடங்களில் போட்டியிடக்கூடிய தேசிய கட்சி, இன்று 10 இடங்களில் போட்டியிடுகிறது. அதன், 'கிராப்' கீழே இறங்கி வருகிறது; நாம் மேலே போகிறோம்.
டவுட் தனபாலு: யாரு மேல போறாங்க, கீழே இறங்குறாங்க என்பது இங்க விஷயமில்லை... கடந்த 50 வருஷங்களா, ரெண்டு கழகங்களை எதிர்த்து, எத்தனையோ கட்சிகள் உருவானாலும், கடைசியில் அவை கழகங்களிடம் தஞ்சம் புகுந்து தான் காலத்தை ஓட்டுகின்றன என்பதில், 'டவுட்'டே இல்லை!
ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2013ல் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். தரவுகளும், சாட்சிகளும் சரியில்லாததால் அவர் விடுதலை ஆகிவிட்டார். அப்போது ஜாபர் சாதிக்கிற்கு ஆதரவாக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ் வாதிட்டார். எனவே இதுகுறித்து பேச அ.தி.மு.க.,விற்கும், பா.ஜ.,விற்கும் தகுதி இல்லை.
டவுட் தனபாலு: கிட்டத்தட்ட, 11 வருஷத்துக்கு முன்னாடியே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியவரை, உங்க கூட்டணி கட்சியான தி.மு.க., தன் கட்சியில எப்படி சேர்த்துக் கொண்டது, எதற்காக சேர்த்துக் கொண்டது, அதற்காக நடந்த கைம்மாறு என்ன என்று பல, 'டவுட்'கள் கிளம்புதே!
புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம்: கடந்த லோக்சபா தேர்தலில், இத்தொகுதியில் எம்.பி.,யாக்குகிறேன் எனக்கூறி, அ.தி.மு.க.,வினர் என் முதுகில் குத்தி தோற்கடித்து விட்டனர். நான் ஜெயித்து மத்திய அமைச்சராகக் கூடாது என்பதற்காகவே, அ.தி.மு.க., வினர் ஓட்டு போடவில்லை. அதனால் தான், நல்லதோ, கெட்டதோ, மோடியிடம் சென்று விட்டேன். ஜெயித்தால் மோடி எனக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்; இல்லாவிட்டாலும், வேறு ஏதாவது ஒரு பதவி கொடுப்பார்.
டவுட் தனபாலு: அடடா... அன்றைக்கு அ.தி.மு.க.,வினர் மட்டும் உங்க முதுகில் குத்தியிருக்கா விட்டால், நீங்களும் ஜெயிச்சு மத்திய அமைச்சர் ஆகியிருப்பீங்க... கடந்த அஞ்சு வருஷமா, நாடு நல்ல மத்திய அமைச்சரின் நிர்வாகத்தை இழந்துடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!

