PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்: சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழகத்தில், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: முக்கிய பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க துவங்கி, முழு நேர அரசியல்வாதி ஆனதற்கு வாழ்த்துக்கள்... ஆனா, நேரடியா களத்துக்கு வருவீங்களா அல்லது வெறும் அறிக்கை அரசியல்வாதியா மட்டும் இருந்துடுவீங்களா என்ற, 'டவுட்'களும் கூடவே வருதே!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: மீண்டும்ஆட்சியை பிடிக்க துடிக்கும் பா.ஜ., குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. இதன் வழியே, பொதுமக்களை பிளவு படுத்தி,இறையாண்மையை சிதைக்க துடிப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 2019ல் இந்த சட்ட திருத்தம் பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட போதே, மக்கள் நீதி மய்யம் கடுமையாக எதிர்த்தது. தமிழகத்தில் இருந்து முதல் முறையாக ம.நீ.ம., தான் உச்ச நீதிமன்றத்தை நாடியது.
டவுட் தனபாலு: இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிற உங்க கூட்டணி பார்ட்னரான தி.மு.க., கூட, வழக்கு தொடரலையே... நீங்க, 2019லயே உச்ச நீதிமன்றத்தை நாடியதை இப்ப சுட்டிக்காட்டியதால, அடுத்த வருஷம் உங்களுக்கு ராஜ்யசபா சீட் கிடைப்பது, 'டவுட்'தான்!
பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன்: ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு பெயர் போனது தி.மு.க., ஆட்சி. மத்திய அரசு கொண்டு வந்த, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிங்கார சென்னை 2.0 என தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது.
டவுட் தனபாலு: மக்கள் எல்லாம் இப்ப தெளிவா இருக்காங்க... எது, மத்திய அரசு திட்டம், மாநில அரசு சலுகைகள் என்ன என்ற புரிதல் எல்லாம் அவங்களிடம் ரொம்பவே இருக்குது... அதனால, எப்படி ஸ்டிக்கர் ஒட்டினாலும், அதை வச்சு ஓட்டுகளை அறுவடை பண்ண முடியுமா என்பது, 'டவுட்'தான்!

