PUBLISHED ON : மார் 17, 2024 12:00 AM

தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி: நாங்கள் என்றும் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படுவதில்லை. எங்களுக்கு உள்ள உரிமையை தான் எடுத்துக் கொள்கிறோமே தவிர, அடுத்தவர் உரிமையில் கை வைக்கும் பழக்கம் திராவிட மாடல் ஆட்சிக்கு கிடையாது.
டவுட் தனபாலு: சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் இடம் தேர்வு செய்தது முதல், நிதி ஒதுக்கீடு செய்து பஸ் ஸ்டாண்ட் கட்டியது எல்லாமே அ.தி.மு.க., ஆட்சியில் தானே... அதை ரிப்பன் மட்டும் வெட்டி திறந்து வச்சுட்டு, கருணாநிதி பெயரையும், அவரது சிலையையும் அங்க நிறுவிட்டு, இப்படி பேசுவது முறையா என்ற, 'டவுட்' வருதே!
காஷ்மீரில் செயல்படும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என மத்திய அரசு தண்டோரா போடுகிறது. ஜம்மு -- காஷ்மீரில் இருந்து அதை துவங்க அருமையான வாய்ப்பு வந்துள்ளது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் இரண்டையும் அறிவித்து, ஜனநாயகத்தை மீட்டெடுப்பது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.
டவுட் தனபாலு: தேர்தல்ல நின்று மறுபடியும் முதல்வராகி, அதிகாரத்தை ருசிக்கணும் என்ற உங்க உள்ளக்கிடக்கை நல்லாவே புரியுது... அதனாலயே, நாடு முழுக்க எல்லா எதிர்க்கட்சிகளும் எதிர்க்கிற ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை, இருகரம் கூப்பி வரவேற்குறீங்க என்பதும், 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கடந்த 28 மாதங்களில், மத்திய அரசு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு, 15 ரூபாயும்; டீசல் விலையில் லிட்டருக்கு, 18 ரூபாயும் குறைத்துள்ளது. தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதியாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 5 ரூபாயும்; டீசல் விலை லிட்டருக்கு, 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று கூறி, ஆட்சிக்கு வந்தது. இதுவரை, 35 மாதங்களாகியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
டவுட் தனபாலு: மத்திய அரசு, 28 மாதங்களில் படிப்படியா விலையை குறைத்தது என்றால், அடிக்கடி பல மாநிலங்கள்ல நடந்த சட்டசபை தேர்தல்கள் தான் காரணம்... அதே மாதிரி, 2026 சட்டசபை தேர்தல் நெருக்கத்துலயும், திராவிட மாடல் அரசு பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

