PUBLISHED ON : மார் 19, 2024 12:00 AM

பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி: பிரதமர் மோடியை, '28 பைசா' என அழைப்பேன் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்குடன் தொடர்பு வைத்திருப்பதால், அவரை, 'டிரக்' அமைச்சர் என அழைக்கலாமா?
டவுட் தனபாலு: 'நான், கருணாநிதியின் பேரன்' என அடிக்கடி தம்பட்டம் அடித்து கொள்ளும் உதயநிதி, அவரிடம் இருந்த அரசியல் நாகரிகத்தை மட்டும் கத்துக்கவே இல்லை... அப்படி கற்றுக் கொண்டிருந்தால், இப்படி எதிர்க்கட்சியிடம் மூக்குடை பட்டிருக்க வேண்டாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ.,வில் இணைந்த ம.நீ.ம.,வின் கொள்கை பரப்பு மாநில செயலர் அனுஷா ரவி: அமெரிக்காவில் 10 ஆண்டுகள் பணியாற்றி சொந்த ஊர் திரும்பிய நான், கமல் முன்வைத்த அரசியல் மாற்று கொள்கையை நம்பி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தேன். ஆனால், ஒரு ராஜ்யசபா எம்.பி.,க்காக லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க.,வுக்கு ஆதரவளிப்பது என்ற கமலின் முடிவு, அவரை நம்பி முதல் முறையாக அரசியலுக்கு வந்த எங்களை போன்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
டவுட் தனபாலு: நீங்க மட்டும் இல்லை... கமலை நம்பி, கட்சிக்கு வந்த பலரும் இப்படித்தான் மனம் குமுறிட்டு இருக்காங்க... இதுக்கு பேசாம, சரத்குமார் பாணியில, ம.நீ.ம.,வை தி.மு.க.,வுலயே கமல் இணைச்சிருக்கலாம்... கொஞ்சமாவது கவுரவமா இருந்திருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ.,வில் உள்ள நடிகர் சரத்குமார்: குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, ஒரு செய்தியாளராக அவரை பேட்டி எடுக்கச் சென்றேன். அப்போது, அவரிடம் காணப்பட்ட உத்வேகம் இப்போதும் இருக்கிறது. நான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை மாநிலத் தலைவர் அண்ணாமலை தான் சொல்வார். நேற்று வரை கூட்டணி கட்சித் தலைவராக பேசியது வேறு; தற்போதுள்ள நிலைமை வேறு. நேற்று வரை எஜமான்; இன்று வேலைக்காரன்.
டவுட் தனபாலு: பொதுவா, வேலைக்காரனை தான் பல கட்சிகள் எஜமான் ஆக்கி பார்க்கும்னு கேள்விப்பட்டிருக்கோம்... ஆனா, எஜமானா இருந்த உங்களை வேலைக்காரனா மாற்றிய பா.ஜ., நிச்சயமா ஒரு வித்தியாசமான கட்சிதான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

