PUBLISHED ON : மார் 20, 2024 12:00 AM

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: தமிழிசை, கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஷயம் தெரியாமல் தேர்தல் களத்தில் இறங்குகிறார். லோக்சபா தேர்தல் முடிவு மாறி அமைந்தால், துணை ஜனாதிபதி ஆகலாம் என்று நினைக்கிறார். ஆனால், அடுத்து அமையப் போவது 'இண்டியா' கூட்டணி ஆட்சி என்பதால் அது நடக்கப் போவதில்லை.
டவுட் தனபாலு: ஒன்றுக்கு ரெண்டு மாநிலங்களுக்கு கவர்னரா இருந்தும், அதை உதறி தள்ளிட்டு வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாம மக்களை சந்திக்க வர்ற தமிழிசையின் துணிச்சலை பாராட்டியே ஆகணும்... உங்க அமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு, தமிழிசையை எதிர்த்து களம் இறங்குனா உங்க, 'தில்'லை, 'டவுட்' இல்லாம பாராட்டலாம்!
பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன்: தேர்தல் பத்திரம் என்பது, தாமாக முன்வந்து கட்சிக்கு நிதியளிக்கும் முறை தான். தமிழகத்தில், அதிகமாக நிதி வாங்கியது தி.மு.க., தான். அவர்கள் ஊழல் செய்து தான், நிதி வாங்கினரா என மக்கள் கேட்க வாய்ப்புள்ளது.
டவுட் தனபாலு: தமிழக அளவில், தி.மு.க., தான் அதிகமா, 'வாங்கியிருக்குது' என்பது சரிதான்... ஆனா, அகில இந்திய அளவில், 6,000 சொச்சம் கோடி ரூபாயை வாங்கி, உங்க கட்சி தானே டாப்பில் இருக்குது... அதனால, உங்க கட்சி மேல தான் சந்தேகத்தின் நிழல்கள் அதிகமா படியுது என்பதில், 'டவுட்'டே இல்லை!
இந்திய ஜனநாயக கட்சியின், பெரம்பலுார் எம்.பி., பாரிவேந்தர்: பெரம்பலுாரில், தி.மு.க., சார்பில் போட்டி யிடுவதாக கூறப்படும், அமைச்சர் நேருவின் மகன் அருணை பலம் மிக்க வேட்பாளராக நான் கருதவில்லை. தி.மு.க.,வினரே அவரை விரும்பவில்லை. தி.மு.க., நாடக கம்பெனி போல் உள்ளது. மக்கள் சேவை என்ற எண்ணமே அக்கட்சிக்கு கிடையாது.
டவுட் தனபாலு: அருண், தேர்தல் களத்துக்கு புதியவரா இருக்கலாம்... ஆனா, அவரது தந்தையின் செல்வாக்கு, 'நெட்ஒர்க்' எல்லாம் உலகறிஞ்ச ரகசியமாச்சே... தேர்தலுக்கு முதல் இரண்டு நாட்களும், 'பட்டுவாடா'வில் அவங்க காட்டுற பாய்ச்சலுக்கு, உங்களால ஈடு கொடுக்க முடியுமா என்பது, 'டவுட்'தான்!

