PUBLISHED ON : மார் 21, 2024 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி: பிரதமர் மோடி, மூன்றாவது முறை இந்தியாவின் பிரதமராக வெற்றி பெற வேண்டும் எனும் நோக்கில், பா.ம.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. நாடு, தமிழக நலன் கருதி, இந்த முடிவை எடுத்துள்ளோம். நமக்கெல்லாம் மாற்றம் வேண்டும். மக்களும் மாற்றம் வராதா என்ற ஏக்கத்தில் உள்ளனர். மக்களின் ஏக்கத்தை தணிக்கவே, பா.ம.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.
டவுட் தனபாலு: மக்களின் ஏக்கத்தை தணிக்கவே, பா.ஜ., கூட்டணியில சேர்ந்தோம்னு சொல்றீங்களே... யாரோட ஏக்கத்தை தீர்க்க, அ.தி.மு.க., தரப்பிடம் இவ்வளவு நாட்களா பேரம் பேசினீங்க என்ற, 'டவுட்'டுக்கு விடை தர முடியுமா?
தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை: என் ராஜினாமா நான் எடுத்த முடிவு. தெலுங்கானா கவர்னர் மாளிகையில் 300 பணியாளர்கள், என்னை சுற்றி ஐந்து பணிப்பெண்கள் எப்போதும் இருப்பர். இப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டு, பொது வாழ்க்கைக்கு வருகிறேன் என்றால், அதில் உள்ள அன்பை புரிந்து கொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: நீங்க மெயின் கவர்னரா இருந்த தெலுங்கானாவில், எதிர்க்கட்சிகள் தான் ஆட்சி செய்தன... புதுச்சேரி ரொம்பவும் சின்ன யூனியன் பிரதேசம்... இந்த மாநிலங்கள்ல கவர்னர் பதவிக்கு உரிய மரியாதை கிடைக்காத விரக்தியில, அவற்றை ராஜினாமா பண்ணிட்டு, தேர்தல் நிற்குறீங்களோ என்ற 'டவுட்'தான் வருது!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: பிரதமர் மோடி, ஐந்து முறை அல்லது 50 முறை வந்தாலும், தமிழகத்தை திராவிடத்தின் பிடியில் இருந்து விடுவிக்க முடியாது. தி.மு.க.,வின் கோட்டையான திருச்சி தொகுதியை ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி. தேர்தலில், 40 தொகுதிகளிலும் தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ.,வுக்கு பயந்து, அக்கட்சியுடன் பா.ம.க., கூட்டணி அமைத்துள்ளது.
டவுட் தனபாலு: எந்த தி.மு.க.,வை எதிர்த்து கட்சி துவங்குனீங்களோ, அதே தி.மு.க.,விடம் நாலு, அஞ்சு சீட்கள் வாங்கிய காலம் போய், இப்ப ஒரே ஒரு எம்.பி.,சீட்டுக்காக, அதையும் உங்க மகனுக்காக வாங்கிய நீங்க, பா.ம.க.,வை பத்தி பேசலாமா என்ற, 'டவுட்'தான் வருது!

