PUBLISHED ON : செப் 23, 2024 12:00 AM

பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்: 'கச்சத்தீவை இந்தியாவிற்கு தர முடியாது' என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறுகிறார். தற்போது, இலங்கையில் தேர்தல் நடக்கிறது. அதனால் எதுவானாலும் சொல்லட்டும். அது பற்றி நாம் பேச தேவையில்லை.
டவுட் தனபாலு: 'இலங்கையில் தேர்தல் நடக்கிறப்ப, அவங்க அப்படி தான் பேசுவாங்க... நம்ம நாட்டுல தேர்தல் நடக்கிறப்ப, நாங்களும், கச்சத்தீவை மீட்போம்னு வாக்குறுதி தருவோம்னு சொல்லாம சொல்றாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: 'நீட் இல்லாமலேயே இந்திய அளவில் தலைசிறந்த மருத்துவர்களை, தமிழகம் தந்துள்ளது. தமிழக அரசு பாடத்திட்டத்தின் கல்வித்தரம் உயர்வானது. எனவே, நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை. முதல்வர் டில்லியில் பிரதமரை சந்திக்கும்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குஅளிக்க வலியுறுத்துவார்.
டவுட் தனபாலு: உச்ச நீதிமன்றமே நீட்டை ரத்து பண்ண முடியாதுன்னு சொல்லிடுச்சு... நீங்க என்ன தான் வலியுறுத்தினாலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்க போறதில்லை... ஆயினும், அரசியலுக்காக திரும்ப திரும்ப இப்படி பேசிட்டு இருக்கீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தி.மு.க., அமைச்சர் கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஊழல் வழக்குகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், 2021 ஆட்சி மாற்றத்திற்கு பின், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, அந்தர் பல்டி அடித்தது. இதை பார்த்த சென்னை உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக, அந்த வழக்கு களை மீண்டும் விசாரித்து வருகிறது. இதிலிருந்தே, அந்தத் துறை எப்படி செயல்படுகிறது என்பதை அறியலாம்.
டவுட் தனபாலு: உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக எடுத்த ஊழல் வழக்குகளில், உங்க கட்சியின் முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதியின் வழக்குகளும் அடக்கம் என்பதை மறந்துட்டீங்களா என்ற, 'டவுட்' வருதே!