PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

திருப்பூர் தொகுதியின் இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயன்: பல பகுதிகளைச் சேர்ந்த குற்றவாளிகள் திருப்பூருக்கு வந்து தங்குகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து, இளைஞர்களை சீரழிக்கிறது. போலீசில் புகார் அளித்தால், புகார்தாரர் மிரட்டப்படுகிறார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என தோன்றுகிறது.
டவுட் தனபாலு: 'வங்கதேச குற்றவாளிகள் பலர், திருப்பூரில் தஞ்சம் புகுந்துட்டு இருக்காங்க'ன்னு, அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பலமுறை எச்சரிக்கை பண்ணிட்டாரு... ஆனா அவர், பா.ஜ.,வைச் சேர்ந்தவர் என்பதால், அதை மாநில அரசு கண்டுக்கவே இல்லை... பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பே, மாநில அரசு முழிச்சுக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்: காமராஜர் ஆட்சியை பார்க்காத, படித்து தெரிந்து கொள்ளாதவர்கள், அதை மற்றவைகளுடன் ஒப்பிடுவது தவறு. காங்., முன்னாள் தலைவர் ராஜிவ் கனவு, காமராஜர் ஆட்சி. அது உண்மையான காங்கிரஸ் உணர்வாளர்களின் கனவு. ஒருநாள் அது நிச்சயம் நடக்கும்.
டவுட் தனபாலு: திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்தபடியே, தமிழகத்தில் ஒரு நாளும் காமராஜர் ஆட்சியை அமைக்கவே முடியாது... அதே நேரம், பதவி ஆசை பிடித்த சில தலைவர்கள் இருக்கும் வரை, காமராஜர் ஆட்சி என்பது கானல் நீர்தான் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
பீஹாரில் செயல்படும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்: என்னை பொறுத்தவரை மஹா கும்பமேளா என்பது அர்த்தமற்ற ஒன்று. புதுடில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, மத்திய அரசின் அலட்சியமே காரணம்.
டவுட் தனபாலு: 'நம்புறவங்களுக்கு கடவுள்; நம்பாதவங்களுக்கு கல்'னு சொல்லுவாங்க... எங்க ஊர்ல, மாடுகளை தெய்வமா நினைச்சு, அதுக்கு அகத்திக்கீரை, பழங்கள்னு தீவனம் வாங்கிக் குடுப்பாங்க... ஆனா, வடமாநிலங்கள்ல அந்த மாடுகளுக்கான தீவனத்துல கோடி கோடியா ஊழல் செய்தவங்களும் இருக்காங்களே... அந்த மாதிரிதான் கும்பமேளா நம்பிக்கையும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

