PUBLISHED ON : மார் 17, 2025 12:00 AM

வி.சி., கட்சி துணை பொதுச்செயலர் வன்னியரசு: ஸ்ரீவைகுண்டத்தில், பள்ளி மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்ப வத்தில், உண்மையான குற்ற வாளிகள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை ஆளும் அரசன், ஒற்றர் படை என்ற உளவுத்துறையை வைத்துக் கண்ட றிய வேண்டும். அப்படி கண்டறியவில்லை என்றால், அந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என திருவள்ளுவரே கூறியிருக்கிறார்.
டவுட் தனபாலு: முதல்வரின் மோசமான நிர்வாகத்தால ஆட்சி கவிழும் என்றால், அதற்கு முரட்டுத்தனமா, 'முட்டு' கொடுத்துட்டு இருக்கிற நீங்களும் சேர்ந்துதான் பாதிக்கப்படுவீங்க... அந்த பயத்துலதான் இப்படி எச்சரிக்கை விடுக்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: அண்ணாமலை வெள்ளாள கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர். கவுண்டர்கள், உயர்ஜாதி பிரிவில் இருந்தனர். இட ஒதுக்கீடு மூலம் பலர் உயர்கல்வி பெற்று மருத்துவர், பொறியாளர்கள் ஆனதும், தங்களையும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு மாற்றுங்கள் என அந்த சமுதாயத்தினர், முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் முறையிட்டு அதை பெற்றனர். கருணாநிதியால் பெறப்பட்ட இட ஒதுக்கீட்டில், இருமொழிக் கொள்கையில் படித்தவர் அண்ணாமலை. அவரும், சினிமாக்கார பொறுக்கிகளும் தி.மு.க.,வை விமர்சிக்கக் கூடாது.
டவுட் தனபாலு: இட ஒதுக்கீட்டால் பலன் பெற்றவங்க, தி.மு.க.,வை விமர்சிக்கக் கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்குதா என்ன...? சினிமாக்கார பொறுக்கிகள்னு எடுத்தெறிஞ்சு பேசுறீங்களே... உங்க கட்சியின் இளம் தலைவரும், அந்த துறையில் இருந்து வந்தவர் தான் என்பதை மறந்துட்டீங்களா என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: தமிழகத்தில், மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் கடைக்கோடி மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் கொண்டு சேர்த்துள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய அரசு, அமலாக்கத் துறை அதிகாரிகளை ஏவி, 'டாஸ்மாக்' நிறுவனத்தில் சோதனை நடத்தி உள்ளது.
டவுட் தனபாலு: மத்திய அரசு பழிவாங்குது என்றாலும், தமிழகத்தில், 70க்கும் மேற்பட்ட அரசு துறைகள் இருக்குதே... அங்க எல்லாம் அமலாக்கத் துறையை அனுப்பாம, உங்க துறைக்கு மட்டும் ஏன் அனுப்பணும்...? 'டாஸ்மாக்' என்பது அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி என்பது தெரிஞ்சுதான், அங்க வந்திருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!