PUBLISHED ON : மார் 19, 2025 12:00 AM

த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த்: 'டாஸ்மாக்' நிறுவனத்தில் 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டித்து தமிழக பா.ஜ.,வினர், மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தையாக உள்ளது. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, போராட்டத்தின் வாயிலாக கண்டிக்க முயல்வது யாரை ஏமாற்ற... எதற்காக இந்த கண்ணாமூச்சி ஆட்டம்? தங்களை எதிரிகள் போல் காட்டிக்கொண்டு, மறைமுக கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
டவுட் தனபாலு: தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் மறைமுக உறவு இருக்குன்னு குற்றம் சாட்டுறீங்களே... அதே மாதிரி, உங்க தலைவர் விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு தர்றதால, உங்க ரெண்டு கட்சிக்கும் ரகசிய உறவு இருக்குன்னு தி.மு.க., குற்றம் சாட்டுனா, 'டவுட்' இல்லாம ஏத்துக்குவீங்களா?
பா.ம.க., தலைவர் அன்புமணி: மாமல்லபுரத்தில், வரும் மே 11ம் தேதி, வன்னியர் சங்கம் - பா.ம.க., இணைந்து நடத்தும்சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாட்டை நாம் வெற்றிகரமாக நடத்த வேண்டும். கூட்டத்தைப் பார்த்து, இவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்என்று, ஆளுங்கட்சியினர் பயப்பட வேண்டும். மாநாட்டிற்கு வரும் கட்சியினர் நிதி கொடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: மாநாட்டுக்கு வந்து நம்ம கட்சியின் பலத்தை காட்டணும்னு தொண்டர்கள் எல்லாம் விருப்பமா தான் இருப்பாங்க... ஆனா, மாநாட்டுக்கு வர்ற கட்சியினர் நிதி தரணும்னு, 'கொக்கி' போட்டுருக்கீங்களே... திரண்டு வர்ற கூட்டத்தை இந்த நிதி கோரிக்கை தடுத்து நிறுத்திடுமோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: 'டாஸ்மாக்'கில் 1,000 கோடி ரூபாய் ஊழலுக்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா? எந்த தவறுக்கும் முதல்வர் இடம் கொடுக்க மாட்டார். யார் மீது என்ன குற்றச்சாட்டும் வேண்டுமானாலும் கூறலாம்; அது, ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட வேண்டும். அமலாக்கத் துறையில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்ல. அமலாக்கத் துறை அதிகாரிகளே லஞ்சம்வாங்கி கைதாகின்றனர்; அவர்கள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல.
டவுட் தனபாலு: இப்ப என்ன சொல்ல வர்றீங்க...? 1,000 கோடி ரூபாய் முறைகேடுக்கு உங்களால ஆதாரத்தை காட்ட முடியாது... அப்படியே ஆதாரங்களை காட்டினாலும், அமலாக்க துறை அதிகாரிகளுக்கும் லஞ்சம் குடுத்து, வழக்கை ஒண்ணுமில்லாம பண்ணிடுவோம்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!