PUBLISHED ON : ஏப் 01, 2025 12:00 AM

விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்: தமிழகத்திற்கு பா.ஜ., அரசு செய்யும் துரோகங்கள் அ.தி.மு.க., தலையில் தான் விழும். மக்கள், அ.தி.மு.க.,வை தான் தண்டிக்கப் போகின்றனர். சமீப காலமாக அண்ணா தி.மு.க., அமித் ஷா தி.மு.க.,வாக மாறி வருகிறது. விரைவில், பா.ஜ., உடன் அ.தி.மு.க., இணைப்பு விழா நடக்கும். எம்.ஜி.ஆர்., வளர்த்தெடுத்த கட்சி, அமித் ஷாவால் அழிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
டவுட் தனபாலு: பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., சேர்ந்துட்டா, தமிழகத்துல தி.மு.க., - காங்., கூட்டணியின் வெற்றி கேள்விக்குறியாகிடும்னு பயப்படுறீங்க... அதனால தான், 'பா.ஜ.,வுடன் சேர்ந்தா அ.தி.மு.க., அழிஞ்சு போயிடும்'னு விஸ்வாமித்திரர் கணக்கா சாபம் விடுறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: துாய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர் ஆக்குவதாகக் கூறி அரங்கேறியுள்ள மிகப்பெரிய ஊழலை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டு உடைத்துள்ளார். இது, மக்கள் மத்தியில் பேசுபொருள் ஆகிவிடக் கூடாது என்பதற்காக, தன் பனையூர் கிளையாகச் செயல்படும் த.வெ.க., எனும் சினிமா கம்பெனியை வைத்து, இன்னொரு திசை திருப்பலை தி.மு.க., அரங்கேற்றி இருக்கிறது. பொதுக்குழுவில் பேசிய நடிகர் விஜய், 'மத்திய அரசு ஜி.எஸ்.டி.,யை வாங்கிக் கொண்டு, தமிழகத்துக்கு நிதி கொடுக்கவில்லை' என்ற தி.மு.க.,வின் நாலாந்தர பேச்சாளர்களின் அறிவற்ற பேச்சை, அப்படியே வாந்தி எடுத்திருக்கிறார்.
டவுட் தனபாலு: விஜயை, 'பா.ஜ.,வின் பி டீம்' என்று தி.மு.க.,வினர் ஒருபக்கம் திட்டுறாங்க... நீங்க, 'தி.மு.க.,வின் பனையூர் கிளை'ன்னு வசைபாடுறீங்க... இதுல உண்மை இருக்கான்னு தெரியலை... ஆனா, விஜய் கட்சியின் வரவு, உங்க ரெண்டு கட்சிகளின் துாக்கத்தைக் கெடுத்திருக்கு என்பது மட்டும், 'டவுட்' இல்லாத உண்மை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: தி.மு.க., அமைச்சர்கள் தரம் தாழ்ந்து சென்றுவிட்டனர். மத்திய தொகுப்பில் இருந்து நிதியை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று கூறி, தாங்களே அதை ஏற்பாடு செய்து கொடுப்பது போல சாதனையாக பேசிக் கொள்கின்றனர்.
டவுட் தனபாலு: தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறைக்கான 2,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு தரணும்னு, முந்தா நாள் வரைக்கும் உங்க கட்சியினரும் பேசிட்டு இருந்தாங்களே... பழனிசாமி - அமித் ஷா சந்திப்பு நடந்ததும், மத்திய அரசுக்கு ஆதரவா பேச ஆரம்பிச்சுட்டீங்களே... பிளேட்டை திருப்பி போடுறதுல, உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!

