PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி' என, நடிகர் விஜய் பேசியிருக்கிறார். அது அவரது கருத்து. ஒவ்வொரு தலைவரும் கட்சி வளர்ச்சி, தொண்டர்களை உற்சாகப்படுத்த, இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பர். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி, அ.தி.மு.க.,தான் என்பதை மக்களே ஏற்று, அதற்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து தேவையில்லை.
டவுட் தனபாலு: விஜய் பேச்சுக்கு ஆவேசமா பதிலடி தராம, சமாளிப்பா பேசுறீங்களே...தி.மு.க.,வுக்கு எதிரான எந்த சக்தியையும் பகைச்சுக்க வேண்டாம்... 2026 சட்டசபை தேர்தல் களம் எப்படி வேண்டுமானாலும் மாறும்னு எச்சரிக்கையா வார்த்தைகளை அளந்து பேசுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி: தமிழகத்தில், 2026ல் எப்படிப்பட்ட கூட்டணிகள் அமையும் என்பதில், தெளிவில்லாத நிலையே உள்ளது. தி.மு.க.,வில் ஏழு கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் முடிவான நிலையை எடுக்கவில்லை. எங்களை பொறுத்தவரை, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி, அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். அதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும்,'ஈகோ'வை விட்டுவிட்டு இணைய வேண்டும் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த, இதுவே சரியான தருணம்.
டவுட் தனபாலு: தி.மு.க.,வைஆட்சியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணையணும்னுசொல்றீங்க... ஆனா, தி.மு.க.,வுக்கு எதிரான பழனிசாமி, சீமான், விஜய் போன்ற தலைவர்கள் எல்லாரும், ஆளாளுக்கு முதல்வர் கனவில் மிதப்பதால் அது நடக்குமா என்பது, 'டவுட்'தான்!
தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: 'தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை' என, நடிகர் விஜய் பேசியுள்ளார். அடுத்த ஆண்டு, தி.மு.க., ஆட்சியை பெண்கள் துாக்கிப் பிடிப்பர். முதல்வர் எங்கு போனாலும், வரவேற்கும் கூட்டத்தில், 80 சதவீதம் பெண்கள் வருகின்றனர். சக்தி மயமான இந்த ஆட்சியை, எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.
டவுட் தனபாலு: முதல்வர்போகும் ஊர்களில் எல்லாம்கூடும் கூட்டத்தில், 80 சதவீதம்பெண்கள் வர்றாங்கன்னு சொல்றீங்களே... அந்த கூட்டத்தைதிரட்ட உங்க கட்சி நிர்வாகிகள்படும்பாடு உங்களுக்கு தெரியுமா... கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டுகளா மாறாது என்ற உண்மை உங்களுக்கு தெரியாதோ என்ற, 'டவுட்'தான் வருது!

