PUBLISHED ON : ஏப் 07, 2025 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 118.9 கி.மீ., பாதை அமைக்கும் பொறுப்பை, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கியது சமூக நீதிக்கு பாதிப்பை உள்ளாக்கும். முதற்கட்ட திட்டத்தை, சென்னை மெட்ரோ நிர்வாகம் இயக்கி பராமரித்து வருகிறது. சென்னை மெட்ரோ திட்டத்தில், தமிழக அரசு முதன்மை பங்குதாரராக உள்ளது. இத்திட்டத்தை, டில்லி மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைப்பதால், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைக்காது. எனவே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: டில்லி மெட்ரோ நிர்வாகத்திடம் இரண்டாம் கட்ட திட்டத்தை ஒப்படைச்சுட்டதால, தமிழர்களுக்கு வேலை கிடைக்குமோ, இல்லையோ தெரியாது... ஆனா, தமிழகத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியினருக்கு, 'எதுவும் தேறுமா' என்பது, 'டவுட்' தான்!
தமிழக, பா.ஜ., மூத்த தலைவர், எச்.ராஜா: தி.மு.க., ஆட்சி நீடிக்கக் கூடாது. தவறுதலாக கூட நீடித்தால், அடுத்த தலைமுறையினருக்கு பேராபத்து. அதனால், தி.மு.க., அரசை அகற்ற வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை. வரும் சட்டசபை தேர்தலுக்கு எங்களின் பிரசாரம், 'தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்காதீர்கள்' என்பதாகவே இருக்கும்.
டவுட் தனபாலு: 'டாஸ்மாக்' உபயத்தால் எத்தனை வாலிபர்கள் குடிச்சு சீரழியுறாங்க... மது, கஞ்சா போதையால தினமும் எத்தனை கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரங்கள் நடக்கின்றன என்ற புள்ளி விபரங்களுடன் நீங்க பிரசாரம் செய்தாலே, உங்க எண்ணம் ஈடேறும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வருகிறார். அவருடன் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.,வான, ஜே.சி.டி.பிரபாகர், பெங்களூரு புகழேந்தி போன்றோர் ஏற்கனவே விலகி விட்டனர். இந்நிலையில், அவரது அணியின் கொள்கை பரப்பு செயலராக இருந்த மருது அழகுராஜும் விலகி விட்டார்.
டவுட் தனபாலு: பன்னீர்செல்வத்தை நம்பி போன பலரும், ஒருவர் பின் ஒருவரா கழன்று ஓடிட்டே இருக்காங்க... இந்த சூழலில், தொண்டர் உரிமை மீட்பு குழுவை நடத்துற பன்னீர்செல்வம் அணியில், கடைசியில அவரும், அவரது மகன்களும் மட்டும் தான் இருப்பாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

