PUBLISHED ON : ஏப் 08, 2025 12:00 AM

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார்: பல தலைவர்கள் உயிரோடு இருந்தபோதும், சிறையில் இருந்தனர்; இறந்து சிலையான பின்னும், சிறையில் இருப்பது போல கம்பி வலைக்குள் இருப்பது வேதனை. பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும் அகற்ற, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுபோல, தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளையும் அகற்றி, ஒரே இடத்தில் வைக்க, தாலுகா அளவில் சமத்துவ பூங்காவை உருவாக்க வேண்டும்.
டவுட் தனபாலு: எந்த பூங்காவும் வேண்டாம்... அந்தந்த தலைவர்களின் சிலைகளை, அவங்க கட்சியினரே தங்களது அலுவலக வளாகங்களில் நிறுவிட்டா, எந்த பிரச்னைக்கும் இடமிருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: தி.மு.க., நாடகங்களுக்கு மேடையாக சட்டசபை பயன்படுகிறது. முதல்வரும், துணை முதல்வரும், 'நீட்' தேர்வு விவகாரத்தில், 'செலக்ட்டிவ் அம்னீஷியா'வால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு குறித்து, கடந்த ஜன., 10ல் சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேட்டார். உடனே, 'மத்திய அரசு தான், நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்' என முதல்வர் பேசினார். பிறகெதற்கு அனைத்து கட்சி கூட்டம்? ஸ்டாலின் தயாரித்து, உதயநிதி நடித்து, வெளியிடுகிற நீட் தேர்வு படம் ஓடாது.
டவுட் தனபாலு: 'நீட்' தேர்வு படம் ஓடுதோ, இல்லையோ... அடுத்த சட்டசபை தேர்தல்ல, நீட் பற்றி வாக்குறுதி தந்து ஓட்டுகளை அள்ள முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை... இந்த விவகாரத்தில், ஆளுங்கட்சியின் தோல்வியை மறைக்கவே, அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடகத்தை அரங்கேற்றம் பண்றாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, செங்கோட்டையன் சந்தித்து பேசியுள்ளார். அவர், கட்சியின் மூத்த முன்னோடி. மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காகத் தான், அவர் மத்திய அமைச்சரை சந்தித்துள்ளார்; அதில் தவறில்லை. இதை வைத்து, கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
டவுட் தனபாலு: செங்கோட்டையன் கடந்த நாலு வருஷமா சும்மா இருந்துட்டு, இப்ப அடிக்கடி போய் மத்திய நிதியமைச்சரை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன...? நாலு வருஷமா மக்கள் நலன் மீது அக்கறை இல்லாதவருக்கு, இப்ப மட்டும் அக்கறை வந்தது எப்படி என ஏகப்பட்ட, 'டவுட்'கள் எழுதே!

