PUBLISHED ON : ஏப் 10, 2025 12:00 AM

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: அரசியல் அறத்தை அடகு வைத்துவிட்டு, துரோகங்களை மட்டுமே செய்து முன்னேறியவர் பழனிசாமி. ஜெயலலிதா அருகில் கூனிக்குறுகி நிற்பார்; ஜெயலலிதாவின் கார் டயரை தொட்டு வணங்குவார். ஆனால், ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக, பா.ஜ.,வின் பாதம் தாங்கியாக மாறி, அவருக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி.
டவுட் தனபாலு: அது சரி... தி.மு.க.,வை தீயசக்தி என விமர்சித்த ஜெ.,வால் அடையாளம் காணப்பட்டவர் நீங்க... அவங்க ஆட்சியில் அமைச்சராகவும் இருந்து, தி.மு.க.,வை திட்டித் தீர்த்த நீங்க, இன்று தி.மு.க., அரசிலும் அமைச்சராக வலம் வர்றீங்களே... இது, ஜெ.,வுக்கு நீங்க செய்த துரோகம் இல்லையா என்ற, 'டவுட்' வருதே!
தே.மு.தி.க., தலைமை அறிவிப்பு: தே.மு.தி.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வரும் 30ம் தேதி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிசந்தை கே.வி.மஹாலில் நடக்க உள்ளது. இதில், கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா பங்கேற்று, கட்சியின் எதிர்கால அரசியல் முடிவுகள், திட்டங்கள் குறித்து, ஆலோசனைகள் வழங்க உள்ளார். கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
டவுட் தனபாலு: எல்லா கட்சிகளும், தங்களது பொதுக்குழு, செயற்குழுவை சென்னையில் தானே நடத்தும்... ஒருவேளை, தர்மபுரி பக்கம்தான் விஜயகாந்த் விசுவாசிகள் ஓரளவுக்கு இருக்காங்க... அவங்க வந்தால்தான் மண்டபம் நிறையும்னு நினைச்சு, அங்க போய் நடத்துறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலை: பிரதமர் மோடிக்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். அவர் கிணற்றில் குதிக்க சொன்னாலும் குதிப்பேன். ஒரு கட்சியை பார்த்தோ, அதன் சித்தாந்தத்தை பார்த்தோ நான் அரசியலுக்கு வரவில்லை. மோடி சொன்னால், அதை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துவேன். அவரது கட்டுப்பாடுகளை முழுமையாக ஏற்று செயல்படுவேன்.
டவுட் தனபாலு: 'பா.ஜ.,வின் வித்தியாசமான சித்தாந்தங்களாலஈர்க்கப்பட்டு, அந்த கட்சியில் இணைந்தேன்'னு தான் எல்லாரும் சொல்வாங்க... நீங்களோ, 'மோடி சொன்னால் கிணற்றிலும் குதிப்பேன்'னு, ஜெ., காலத்து அமைச்சர்கள் மாதிரி பேசுறீங்களே... உங்களது இந்த தனிநபர் துதியை மோடியே ஏத்துக்குவாரா என்பது, 'டவுட்'தான்!

