PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: மஹாவீர் ஜெயந்திக்காக, பெரும்பான்மை மக்களின் உணவு உரிமையான இறைச்சி கடைகளை மூடும் தி.மு.க., அரசுக்கு, உயிரை குடிக்கும் மதுக்கடைகளை புனித வெள்ளி அன்று மூடுவதில் என்ன தயக்கம். அரசின் ஒருநாள் வருமானம் தடைபடுவதை தவிர, மதுக்கடைகளை மூடுவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை.
டவுட் தனபாலு: போதை விஷயத்தில் எப்பவும் உஷாராக இருக்கும், 'குடி'மகன்கள் முதல் நாளே தேவையான, 'சரக்கு'களை வாங்கி, 'ஸ்டாக்' வச்சுக்கிடுவாங்க... அதனால, ஒரு நாள் கடையை மூடினாலும், அரசுக்கு எந்த வகையிலும் வருவாய் பாதிக்கப்படாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியபடி, 2021 சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்திருந்தால், தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்காது. அதுபோன்ற தவறு இப்போது நடக்கக்கூடாது என்பதில், அவர் உறுதியாக இருக்கிறார். 'அ.தி.மு.க., உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம்' என, அமித் ஷா கூறினாலும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை பா.ஜ., கைவிடாது.
டவுட் தனபாலு: 'பா.ஜ., கூட்டணிக்கு வரணும் என்றால், மாநில தலைவராக அண்ணாமலை இருக்க கூடாது' என்ற அ.தி.மு.க.,வின் நிபந்தனையை, அவங்க ஏத்துக்கிட்டதா தகவல்கள் உலா வருது... பழனிசாமி கோரிக்கையை ஏற்று, அவங்க கட்சி தலைமையையே மாற்றிய பா.ஜ., மேலிடம், உங்களையும், பன்னீர்செல்வத்தையும் கழற்றி விடாதுன்னு, 'டவுட்' இல்லாம எப்படி நம்புறீங்க?
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சி.ஆர்.கேசவன்: தமிழக அரசின் அடையாள சின்னத்தில் கூட, கோவில் கோபுரம் தான் இருக்கிறது. அது மிகவும் புனிதமானது என்பதாலேயே, அரசின் சின்னமாக இருந்து வருகிறது. ஆனால், ஹிந்து அடையாளங்கள் மற்றும் அவை சார்ந்த உணர்வுகள் மீது தாக்குதல் நடத்தும் வகையில், அசிங்கமான அருவருப்பான கருத்துக்களை தெரிவித்த பொன்முடிக்கு அரசு பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக, அவர் நீக்கப்பட வேண்டும்.
-டவுட் தனபாலு: இதே, ஜெ., ஆட்சி நடந்து, இப்படி மட்டும் ஒரு அமைச்சர் பேசியிருந்தால், அடுத்த விநாடியே அவரை வீட்டுக்கு அனுப்பி, கைது பண்ணி ஜெயில்லயும் தள்ளியிருப்பாரு... பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், அவரது விழுப்புரம் மாவட்டத்தில் கட்சி கலகலத்து போயிடும்னு முதல்வர் தயங்குறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!