PUBLISHED ON : ஏப் 16, 2025 12:00 AM

ம.தி.மு.க., துணை பொதுச்செயலர், 'மல்லை' சத்யா: ம.தி.மு.க.,வில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு வெகுமானமாக புற்று நோய், பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினி வேஷம், வெளியேறுங்கள் என்ற விருதுகளை எனக்கு தந்துள்ளனர். விளிம்பு நிலையில் இருந்த என்னை குன்றின் மேல் வைத்து அழகு பார்த்து, அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவுக்கு காலம் முழுதும் நன்றியோடு இருப்பேன். என் விசுவாசம், நம்பகத்தன்மையை வைகோ அறிவார்.
டவுட் தனபாலு: ம.தி.மு.க.,வை வைகோ துவங்கிய போது, அவருடன் வந்த பொன் முத்துராமலிங்கம், எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், வேளச்சேரி மணிமாறன், திருப்பூர் துரைசாமின்னு பலர் இன்று அவருடன் இல்லை... 'மல்லை' சத்யாவும் இந்த வரிசையில் சேரப் போகிறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோவின் ஆதரவாளரான வழக்கறிஞர் சத்தியகுமாரன்: 'ம.தி.மு.க.,வை உடைத்து விடலாம்; கட்சியில் பிளவு ஏற்படுத்தலாம்' என, நினைக்கும் துரோகிகளுக்கு ஒன்று சொல்வேன். வைகோ, துரையின் கட்டளையை ஏற்காத, மதிக்காத யாராக இருந்தாலும், பெட்டியை கட்டிக் கொண்டு, வாயை பொத்திக் கொண்டு, வந்த வழியே சென்று விடுங்கள். இது துரையோட காலம் என்பதை எதிரிகளும், துரோகிகளும் உணரும் காலம் வந்து விட்டது.
டவுட் தனபாலு: கூடவே இருந்து நல்லது பண்றது மாதிரியே, கெடுதல் பண்றவங்களை, 'அனுகூல சத்ரு'ன்னு குறிப்பிடுவாங்க... அந்த மாதிரி, துரை வைகோவின் விசுவாசியாக இருந்தே, ஒட்டுமொத்த கட்சியையும் இவர் காலி பண்ணிடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: என்னை ஒரு துருப்புச் சீட்டாக வைத்து, தி.மு.க., கூட்டணியை உடைத்து விடலாம் என தப்புக் கணக்கு போட்டு காய் நகர்த்தினர். 'தி.மு.க., கூட்டணியில் கொடுத்ததைக் காட்டிலும் கூடுதல் தொகுதிகள் தருகிறோம்; ஆட்சியில் பங்கு தருகிறோம்' என, அ.தி.மு.க., தரப்பில் பலமுறை ஆசை காட்டினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி, இது போன்ற அரசியல் நகர்வுகளுக்கு இடமளித்தது இல்லை. அசைத்து பார்த்தனர்; முடியவில்லை. அப்படியெல்லாம் ஊசலாட்டத்தில் இருக்கும் கட்சி வி.சி., அல்ல.
டவுட் தனபாலு: அது சரி... 'அ.தி.மு.க.,வுல ஆசை காட்டியும், நான் போகலை... அதனால, சட்டசபை தேர்தல்ல கணிசமான சீட்களும், ஆட்சியில் பங்கும் தரணும்... இல்லாத பட்சத்தில், அ.தி.மு.க., 'ஆபரை' நான் ஏத்துக்க வேண்டி வரும்'னு தி.மு.க., தலைமைக்கு நாசுக்கா எச்சரிக்கை பண்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

