PUBLISHED ON : ஏப் 20, 2025 12:00 AM

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி: வரும் 2026 சட்டசபை தேர்தலில், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதுதான், புதிய தமிழகத்தின் முழக்கமாக இருக்கும். ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தோடு, யார் கூட்டணி அமைக்கின்றனரோ, அவர்களுக்கே முன்னுரிமை அளிப்போம். ஆட்சியில் பங்கு என்பதே கூட்டணிக்கான நிபந்தனையாக இருக்கும்.
டவுட் தனபாலு: தேசத்தையே, 10 வருஷத்துக்கும் மேலாக ஆண்டுட்டு இருக்கிற பா.ஜ., கட்சிக்கே, 'ஆட்சியில் பங்கில்லை'ன்னு அ.தி.மு.க.,வினர் கதவை சாத்திட்டாங்க... தி.மு.க.,வும் அதே கருத்துலதான் இருக்கு... இதுல, 'ஆட்சியில பங்கு தந்தால்தான் கூட்டணி'ன்னு நீங்க நிபந்தனை விதித்தால், 234 தொகுதியிலும் தனித்துதான் போட்டியிடணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: எம்.ஜி.ஆர்., - ஜெ., காலம் முதல், அ.தி.மு.க., கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் முக்கிய முடிவுகள், நிலைப்பாடுகள் குறித்த தகவல்களை, உரிய நேரத்தில், உரிய முறையில் தலைமை அறிவிக்கும். எனவே, அ.தி.மு.க., தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும், தலைமையின் அனுமதியின்றி, கட்சியின் நிலைப்பாடு குறித்து, எந்த கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது; பேட்டி கொடுக்கக் கூடாது.
டவுட் தனபாலு: நல்லது... ரெண்டு தரப்பிலும் ஆளாளுக்கு பேசி பேசித்தான், 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு வேட்டு வச்சுட்டாங்க... வர்ற 2026 சட்டசபை தேர்தல்லயும், அந்த நிலை வந்துடக் கூடாதுங்கிறதுல உஷாராகவே இருக்கீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: அ.தி.மு.க., கூட்டணியில் எத்தனை, 'சீட்' என்பது பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. பேசி முடிவு எடுக்க வேண்டியவர்கள் மேலிடத் தலைவர்கள். கட்சி மேலிடத்தின் முடிவுதான் இறுதி முடிவு. தற்போது, பா.ஜ.,வுக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். வரும் தேர்தலுக்குப் பின், அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு செல்வர்.
டவுட் தனபாலு: உங்க தாய்க்கட்சியான அ.தி.மு.க.,விடம் நைசாகப் பேசி, கூடுதல் தொகுதிகளை வாங்கணும்னுதான், தமிழக பா.ஜ.,வுல மூத்த தலைவர்கள் பலர் இருக்க, உங்களை தலைமைப் பதவியில் நியமிச்சிருக்காங்க... நீங்க அதை மறந்துட்டு, பந்தை மேலிடம் பக்கம் தள்ளிவிடுறது சரியா என்ற, 'டவுட்' வருதே!

