PUBLISHED ON : ஏப் 28, 2025 12:00 AM

தமிழக, பா.ஜ., பொதுச்செயலர், ராம.சீனிவாசன்: ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சுற்றுலா பயணியர், 26 பேர், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கத்தினரால் சுட்டு கொல்லப்பட்டனர். 'நடந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்' என, வி.சி., கட்சித்தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். ஜம்மு - காஷ்மீரை ஆட்சி செய்யும் முதல்வர் பரூக் அப்துல்லா ராஜினாமா செய்ய வேண்டும் என, அவர் கூறவில்லை.
டவுட் தனபாலு: ஜம்மு - காஷ்மீருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச அதிகாரத்தையும், 370வது சட்டப்பிரிவை ரத்து பண்ணி, மத்திய, பா.ஜ., அரசே எடுத்து கொண்டது... அதுவும் இல்லாம, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, 'இண்டியா' கூட்டணியில் இருக்காரு... அதனால, அவரை ராஜினாமா பண்ணும்படி திருமாவளவன் கேட்கவே மாட்டாரு என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: 'தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்' என, அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை, சென்னையில் சீமான் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, பா.ஜ., கூட்டணியில் இடம்பெறுவது அல்லது, தனது, நாம் தமிழர் கட்சி தலைமையில் தனி கூட்டணி உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டவுட் தனபாலு: சீமான் போக்கு யாருக்கும் பிடிபட மாட்டேங்குதே... 'தனித்து போட்டி'ன்னு சொல்றாரு... இன்னொரு நாள் பா.ஜ., பக்கம், 'இன்டிகேட்டரை' போடுறாரு... மறுநாள், அ.தி.மு.க.,வை திட்டி தீர்க்கிறாரு... 2026 சட்டசபை தேர்தலில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல், சீமான் குழம்பி தவிப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, பா.ஜ., கூட்டணி பெற்ற ஓட்டுகளை சேர்த்தால், தற்போதே நம் கூட்டணி, 115 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது. வலுவான கூட்டணி, ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை ஆகியவை, 2026ல் நமக்கு வெற்றியை தேடி தரும்.
டவுட் தனபாலு: உங்க அணியில் வலுவான கட்சிகள் இணைய உள்ளன என சொல்றீங்களே... அதுல, தினகரனின், அ.ம.மு.க., மற்றும் பன்னீர்செல்வத்தின் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கு இடம் தருவீங்களா என்ற, 'டவுட்' வருதே... ஒருவேளை, பா.ஜ.,வுக்கு மொத்தமா தொகுதிகளை ஒதுக்கிட்டு, தினகரன், பன்னீரை அவங்க பக்கம் தள்ளி விடுவீங்களா என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!

