PUBLISHED ON : ஏப் 30, 2025 12:00 AM

தமிழக துணை முதல்வர் உதயநிதி: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, எட்டு மாதங்களுக்கு முன், 'பா.ஜ.,வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை' எனக் கூறினார். தற்போது, தன்னையும், கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள கூட்டணி வைத்துள்ளார். இதையெல்லாம் பார்த்து, தமிழக மக்கள் சிரிக்கின்றனர்.
டவுட் தனபாலு: உங்க தாத்தா கருணாநிதி, 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்தபோது, 'பண்டாரம், பரதேசிகள் தமிழகத்துக்கும் வந்துட்டாங்க'ன்னு திட்டினாரு... ஆனா, ஒரே வருஷத்தில், 1999ல் லோக்சபா தேர்தல் வந்தப்ப, அதே பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, அஞ்சு வருஷம் அமைச்சர் பதவிகளை அனுபவித்த வரலாறை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: நம் பக்கம், வி.சி.,க்கள் வரமாட்டார்களா என, கதவுகளை திறந்து வைத்து, அ.தி.மு.க., காத்திருந்தது. 'துணை முதல்வர் பதவி தருகிறோம்; ஐந்து அமைச்சர்கள் தருகிறோம்' என்றெல்லாம் பேரம் பேசினர். எல்லாரும் நினைப்பது போன்ற சராசரி அரசியல்வாதி அல்ல திருமாவளவன். இப்படிப்பட்ட ஆசைகளால், திருமாவளவனை வீழ்த்தி விடலாம் என யாரும் நினைத்தால், தோல்விதான் கிடைக்கும்.
டவுட் தனபாலு: அது சரி... 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், 18 சதவீதம் ஓட்டுகள் வாங்கிய, தேசத்தையே கட்டியாளும் பா.ஜ.,வுக்கே, 'ஆட்சி, அதிகாரத்தில் பங்கில்லை'ன்னு பழனிசாமி கதவை மூடிட்டாரு... குறிப்பிட்ட சில மாவட்டங்கள்ல, அதுவும் ஒற்றை இலக்கத்தில் ஓட்டு சதவீதம் வச்சிருக்கிற உங்க கட்சிக்கு துணை முதல்வர், அஞ்சு அமைச்சர் பதவிகள், 'ஆபர்' தந்தாங்க என்பது, 'டவுட்'டை கிளப்புதே!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி: காஷ்மீரில், பயங்கரவாதிகள் குதிரை ஓட்டுபவர்களை போலவும், ராணுவ வீரர்களை போலவும், உள்ளே புகுந்து தாக்குதல் தொடுத்துள்ளனர். இந்திய அரசு, இதற்கு சரியான தீர்வு காண வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரை, இந்தியாவோடு இணைக்க வேண்டும். இந்திய அரசு கவலைப்படாமல், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை மீட்டால், இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும்.
டவுட் தனபாலு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் பலரும், சில வருஷங்களுக்கு முன்னாடியே, 'இந்தியாவுடன் இருந்தால், நல்லா இருந்திருப்போம்'னு கருத்து சொல்லியிருந்தாங்க... அவங்களை நம்முடன் இணைப்பதற்கு இதைவிட்டால், வேற சரியான வாய்ப்பு கிடைக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!

