PUBLISHED ON : மே 02, 2025 12:00 AM

தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ்: கடலுாரில், 2026 ஜன., 9ல் நடக்கும் தே.மு.தி.க., மாநாட்டில் கூட்டணி குறித்து, பிரேமலதா அறிவிப்பார். அதில், நாம் யாரோடு கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பது தெரியும். பிரேமலதா எதிர்க்கட்சித் தலைவராக வேண்டுமா அல்லது முதல்வராக வேண்டுமா என்பதை, தொண்டர்களாகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: அது சரி... உங்க கட்சியின் நிறுவனர் விஜயகாந்த், 2011லேயே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அலங்கரித்து விட்டார்... 15 வருஷம் ஆகியும், 'புரமோஷன்' இல்லாட்டி எப்படி...? அதனால, முதல்வர் பதவிக்கே உங்க அக்கா பிரேமலதாவை முன்னிறுத்துங்க... தொண்டர்கள், 'டவுட்'டே இல்லாம முதல்வராக்கிடுவாங்க!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அ.தி.மு.க., ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழகத்தை, ஜாமினில் வந்தவர்களுக்கு எல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு, முதல்வரே சாட்சி. வரும் 2026ல் ஒரே, 'வெர்ஷன்' தான்; அது, தமிழ்நாடு அ.தி.மு.க., வெர்ஷன். வரும் சட்டசபை பொதுத்தேர்தலில், மக்கள் பெரிய, 'ஓ' போட்டு, 'பை பை ஸ்டாலின்' என்று சொல்லும்போது, ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு, தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி.
டவுட் தனபாலு: உங்க ஆட்சியில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், சட்டசபையில் நடந்த கலாட்டாவுல, சட்டை கிழிந்த கோலத்தில் வெளியில வந்தாரு... 2026 சட்டசபை தேர்தலுக்குப் பின், அந்த சம்பவம், 'ரிப்பீட்' ஆகும்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன்: 'ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் இருப்பதால், 'காலனி' என்ற சொல், இனிமேல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். வாய் ஜாலங்களில் வித்தகர்களான தி.மு.க.,வினர் அறிவித்து வரும் வெற்று விளம்பர அறிவிப்புகளின் வரிசையில், இதுவும் ஒன்று.
டவுட் தனபாலு: முதல்வரின் தந்தை கருணாநிதி, 1997ல், மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களில் இருந்த ஜாதி தலைவர்களின் பெயர்களை நீக்கினார்... 28 வருஷங்களாகியும், அதனால் ஜாதிய பேதம் ஒழிஞ்ச மாதிரி தெரியலை... இப்ப, அரசு ஆவணங்கள்ல பெயரை மாற்றினால் மட்டும் தீண்டாமை பிரச்னை தீருமா என்பது, 'டவுட்'தான்!

