PUBLISHED ON : மே 04, 2025 12:00 AM

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி: ஜாதிவாரி கணக்கெடுப்பு மீது கொள்கை ரீதியாக எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு, சில அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலுக்காக நடக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தில் முடியப் போகிறது. ஒரு ஜாதியில், 100 வகைகள் உள்ளன. ஜாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள ஆபத்தை பா.ஜ., உணரவில்லை. இது பா.ஜ., கொள்கையும் அல்ல.
டவுட் தனபாலு: பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே தீரணும்'கிறாரு... இந்த டாக்டர், 'வேண்டாம்'கிறாரு... ஆனாலும், ஆயிரத்தெட்டு ஜாதிகள், அதுல பல லட்சம் உட்பிரிவுகள் கொண்ட இந்தியாவில், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது வைக்கோல் போரில் குண்டூசியை தேடும் கதையாகவே இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: கடந்த 2021 சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்கு செல்வாக்குள்ள இடங்களில் தான், அ.தி.மு.க., கூட்டணி அதிக இடங்களில் வென்றது. எனவே, பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணியை பயன்படுத்தி, பா.ம.க.,வை உடைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிடுகிறார் என்று, அன்புமணி ஆதரவாளர்கள் சந்தேகப்படுகின்றனர். சட்டசபையில் தி.மு.க.,வை புகழ்ந்து, ஜி.கே.மணி பேசியதும், இந்த சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
டவுட் தனபாலு: ஜி.கே.மணி, காலம் காலமாக பா.ம.க.,வில் இருக்காரு... அவர் கட்சிக்கு எதிராக செயல்படுவாரா என்பது, 'டவுட்'தான்... ஒருவேளை ஆளுங்கட்சியின் அழுத்தத்துக்கு பணிந்து, அவர் தனி அணி கண்டாலும், அவர் பின்னாடி பா.ம.க., தொண்டர்கள் பெருமளவில் அணிவகுப்பாங்களா என்பது அதைவிட பெரிய, 'டவுட்'!
தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா: தமிழகத்தில், நீதிமன்ற அறிவுறுத்தல் அடிப்படையில், இரண்டு அமைச்சர்கள் பதவி இழந்து உள்ளதை தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர். மூத்த அமைச்சராக இருந்த பொன்முடி, பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியாமல், ஆபாசமாக பேசியதை, எந்த தனிநபரும் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது அவர் பதவி இழந்துஉள்ளார். பொதுவெளியில் கருத்துகளை வெளியிடும்போது, எல்லாரும் கவனமாக இருக்க வேண்டும்.
டவுட் தனபாலு: பொன்முடி ஏடாகூடமா பேசி, ஒரு மாசமாகிடுச்சு... அதுபற்றி, உடனே எந்த கருத்தையும் தெரிவிக்காம, அவர் ராஜினாமா பண்ணிட்டு வீட்டுக்கு போனதும், இப்ப பொத்தாம் பொதுவா கருத்து சொல்வது ஏன்... கூட்டணிக்கான எந்த வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையோ என்ற, 'டவுட்' வருதே!

