PUBLISHED ON : மே 08, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: 'பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் தமிழகம் வழியாக இலங்கை தப்பிச் சென்றனர்' என, ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இலங்கைக்கு தான் சென்றனரா அல்லது தமிழகம் தான் பாதுகாப்பானது எனக் கருதி, இங்கேயே தங்கியிருக்கின்றனரா? வங்கதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் கூலி வேலைக்கு வந்துள்ளதாக சொல்கின்றனர். அவர்கள் உண்மையிலேயே வேலைக்கு வந்தனரா அல்லது உளவு பார்க்க வந்துள்ளனரா என்பதை ஆராய்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், வங்கதேசத்தினரை இந்த மண்ணில் இருந்து அகற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.
டவுட் தனபாலு: தமிழகத்தின் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில், திரும்பிய திசையெங்கும் வங்கதேசத்தினர் நிறைய பேர் வலம் வர்றாங்க... இதுல பால் யார், கள் யார்னு நம்ம போலீசார் தான் கண்டறியணும்... இந்த பணியில் அலட்சியமாக இருந்தால், பெரிய விலையை தமிழகம் தர வேண்டியிருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: பஹல்காம் தாக்குதலுக்குப் பின், 'எனக்கு கட்சி முக்கியமல்ல; நாடு தான் முக்கியம். பாகிஸ்தானை துண்டாட வேண்டும்' என்று, காங்., கட்சியை சேர்ந்த, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். அதற்காக அவரை வணங்குகிறேன். ஆனால், இந்த உணர்வு தமிழக முதல்வருக்கு இல்லை.
டவுட் தனபாலு: அகில இந்திய காங்., தலைமை என்ற கடிவாளம் இருந்தும், உண்மையை உரக்கப் பேசிய ரேவந்த் ரெட்டியை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்... அதே நேரம், யாருக்கும் விளக்கம் தர அவசியமில்லாத தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும் இந்த விஷயத்தில் அடக்கி வாசிப்பது ஏன் என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: 'நீட்' தேர்வை விலக்க, தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே எங்கள் ஒரே இலக்கு. நீட் தேர்வை ரத்து செய்ய, தானும் குரல் எழுப்புவது போல காட்டிக்கொள்ளும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, எங்கள் முயற்சிகளுக்கு உதவ வேண்டும்.
டவுட் தனபாலு: 'நீட் தேர்வை ரத்து செய்தால்தான், பா.ஜ., கூட்டணியை தொடர்வோம்'னு பழனிசாமியை நிபந்தனை விதிக்கச் சொன்னாலும் சொல்வார் போலிருக்கே... நீங்க என்னதான் முயற்சி செய்தாலும், அவ்வளவு ஏன், பிரதமர் மோடியே நினைச்சாலும் நீட் தேர்வை நீக்க முடியாது என்பதுதான், 'டவுட்' இல்லாத உண்மை!

