
தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றுகிறோம். தி.மு.க., ஆட்சியில் தான் தனிநபர்கள் பணப்பயன் பெற்றனர். பொருளாதார ரீதியில் எல்லாருக்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமம், நகரம் எல்லாம் வளர்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
டவுட் தனபாலு: அது சரி... தி.மு.க., ஆட்சியில் பொருளாதார ரீதியில் பலருக்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; தனிநபர்கள் பணப்பயன் பெற்றாங்க என்பதில் எந்த, 'டவுட்'டும் இல்லை... ஆனா, அவங்க முதல்வரின் சொந்தமான ஆகாஷ் பாஸ்கரன், துணை முதல்வர் உதயநிதியின் நண்பரான ரத்தீஷ் என்ற தனிநபர்கள் தான் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: பா.ம.க., துணை தலைவர் சுப்பிரமணிய அய்யர், 'சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும், சீற்றம் குறைவதில்லை' என்றார். அதற்கு நான், 'சிங்கத்தின் கால்கள் பழுதும் படவில்லை; சீற்றமும் குறையவில்லை. சீற்றம் அதிகமாகி உள்ளது' என்றேன். அதனால் தான், நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தேன்.
டவுட் தனபாலு: பல சூறாவளிகளுக்கு மத்தியிலும், அரசியல் கடலில் 50 வருஷத்துக்கும் மேலாக அசராமல் நீந்தும் உங்களுக்கு, நீச்சல் குளம் எல்லாம் சர்வ சாதாரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை... ஆனா, முன்னாடி எல்லாம் சிங்கத்தின் சீற்றம், எதிர்க்கட்சிகளை நோக்கி இருந்துச்சு... இப்ப, சொந்த மகனை நோக்கி தான் சீற்றம் அதிகமா இருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி: மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்துக்கு எந்த பாரபட்சமுமின்றி நிதி வழங்கியுள்ளது. ஆனாலும், தமிழக முதல்வர் நிடி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். இச்சூழலில், அக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் திடீரென டில்லி சென்றிருக்கிறார். இவ்வளவு நாட்கள் செல்லாமல், தற்போது சென்றது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., தரப்பு தான், முதல்வரின் டில்லி பயணத்தை விமர்சிக்கிறாங்க என்றால், நீங்களுமா...? உங்க கட்சி மேல்மட்ட தலைவர்களுடன் ஏதாவது, 'டீலிங்' இருக்கலாம்... அது குறித்தெல்லாம் மக்களுக்கு தி.மு.க., தரப்பு தெளிவுபடுத்தினால், உங்க கட்சியின் பெயர் தான் ரிப்பேராகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!