
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: காங்கிரசை ஒரு காலத்தில் எதிர்த்த தி.மு.க., தற்போது அக்கூட்டணியில் உள்ளது. அது பொருந்தா கூட்டணியா? அ.தி.மு.க., - பா.ஜ., பொருந்தா கூட்டணியா. பா.ஜ., கூட்டணியை பார்த்து தி.மு.க.,வுக்கு பயம் வந்துள்ளது. கருத்துகள் வேறாக இருந்தாலும், தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற த.வெ.க., உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் எங்கள் இலக்கு.
டவுட் தனபாலு: உங்க இலக்கில் எந்த சிக்கலும் இல்லை... ஆனா விஜய், மாநிலத்தில் தி.மு.க.,வை எதிர்க்கிற அதே நேரத்தில், மத்தியில் உங்க ஆட்சிக்கும் எதிராக அல்லவா இருக்காரு... அதனால, அ.தி.மு.க., கூட்டணியில் நீங்க இருக்கும் வரை, அந்த பக்கம் விஜய் எட்டிக்கூட பார்ப்பாரா என்பது, 'டவுட்' தான்!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சியை தி.மு.க., நடத்தி உள்ளது. இது, பழனிசாமி போன்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஆதங்கமாக இருக்கிறது. தி.மு.க., ஆட்சியை பற்றி குறை கூறுவதற்கு, பழனிசாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால், தி.மு.க., அரசு மீது ஏதாவது குறை சொல்லி, அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார்.
டவுட் தனபாலு: உங்க ஆட்சியை யாருமே குறை கூறலையா...? கோரிக்கைகள் நிறைவேறாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் எல்லாரும், உங்க அரசை பாராட்டிட்டு இருக்காங்கன்னு உங்களுக்கு யாரோ தப்பு தப்பா தகவல் கொடுக்குறாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: ராஜ்யசபா, 'சீட்' கேட்டு, தே.மு.தி.க., தரப்பில் துாது அனுப்பப்பட்ட நிலையில், அதை கண்டுகொள்ளாமல், அ.தி.மு.க., தலைமை மவுனம் காக்கிறது. இதுகுறித்து தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவிடம் கேட்டபோது, 'ராஜ்யசபா தேர்தல் தேதி இப்போதுதான் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் நேரம் இருக்கிறது. பொறுமை கடலினும் பெரிது' என்றார்.
டவுட் தனபாலு: பெரும்பாலும் மவுனம் சம்மதத்துக்கு அறிகுறின்னு சொல்லுவாங்க... ஆனா, இங்க அ.தி.மு.க.,வின் மவுனம் மறுப்புக்கு அறிகுறி மாதிரி தெரியுதே... ராஜ்யசபா சீட் இல்லன்னு அ.தி.மு.க., மறுத்துட்டா, சட்டசபை தேர்தலில் அவங்களுடன் கூட்டணி சேர பிரேமலதா சம்மதிப்பது, 'டவுட்'தான்!