PUBLISHED ON : ஜூன் 02, 2025 12:00 AM

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம்: 'கன்னட மொழி சிறந்தது' என, அம்மாநில மக்கள் கூறிக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. நடிகர் கமல் ஹாசன் மொழியியல் வல்லுநர் கிடையாது. ஏற்கனவே இருக்கும் மொழியியல் வல்லுநர்கள் கூறிய கருத்தை தான், தன் கருத்தாக தெரிவித்துள்ளார். கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக, வன்முறையை கட்டவிழ்த்து, இரு மாநிலங்களுக்கிடையே பிரச்னையை துாண்டுவது போல கர்நாடக மாநில, பா.ஜ., அரசியல் செய்கிறது.
டவுட் தனபாலு: கமல் விஷயத்தில், கர்நாடக, பா.ஜ., மட்டுமல்ல... அந்த மாநிலத்தின், காங்., முதல்வர் சித்தராமையாவே கண்டனம் தெரிவித்துள்ளாரே... 'இண்டியா' கூட்டணியில் இருப்பதால், காங்கிரஸ் கண்டனத்தை கண்டுக்காம, பா.ஜ., எதிர்ப்பை மட்டும் பதிவு செய்றீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர், டாக்டர் கிருஷ்ணசாமி: தி.மு.க., அறிவித்த ராஜ்யசபா வேட்பாளர்களில் ஒருவர் கிறிஸ்துவர், மற்றொருவர் முஸ்லிம், இன்னொருவர் ஹிந்து. வெளிப்படையாகவே, முஸ்லிம் - கிறிஸ்துவர் ஓட்டு வங்கியை குறி வைத்து வேட்பாளர்களை, தி.மு.க., நிறுத்தியுள்ளது. இதில், சமூக நீதி எங்கே இருக்கிறது.
டவுட் தனபாலு: ராஜ்யசபா எம்.பி., பதவியை யாருக்கு தருவது என்பது குறித்து, அந்தந்த நேரத்து அரசியல் சூழலுக்கேற்பவே கட்சிகள் முடிவெடுக்கும்... இதுல எல்லாம் சமூக நீதியை பார்த்துட்டு இருந்தால், அவங்களது ஓட்டு வங்கியில, 'ஓசோன்' படலம் அளவுக்கு ஓட்டை விழுந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தி.மு.க., மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி: இன்னும், ஆறு மாத காலத்துக்குள் திருப்பூர் வடக்கு, அவிநாசி, பல்லடம் சட்டசபை தொகுதிகளில் முழுமையாக ஆய்வு செய்து, கடந்த தேர்தல்களில் எந்தெந்த பூத்களில் நமக்கு ஓட்டுகள் சரிந்தன என்பது குறித்து கட்சியினர் கணக்கெடுக்க வேண்டும். பா.ஜ.,வினர் எந்தெந்த பூத்களில் அதிக ஓட்டுகளை பெற்றனர்; அந்த இடங்களில், தி.மு.க.,வுக்கு ஏன் சரிவு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் திரட்டப்பட வேண்டும். பலவீனமாக உள்ள அனைத்து பகுதிகளிலும் களப்பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
டவுட் தனபாலு: அது சரி... 'தி.மு.க.,வுக்கு ஓட்டுகள் குறைந்த பகுதிகள்ல, 'பட்டுவாடா'வை முன்கூட்டியே துவங்கிடணும்... கடைசி நேரத்துல கரன்சி மழையை கொட்டணும்' என்பது தான், தி.மு.க.,வின் களப்பணி என்பதில், 'டவுட்'டே இல்லை!