PUBLISHED ON : ஜூன் 05, 2025 12:00 AM

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: 'தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுமா; கூட்டணிக்கு பிரேமலதா வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா' என, பத்திரிகையாளர்கள் கேட்கின்றனர். 'இண்டியா' கூட்டணிக்கு தமிழகத்தில் ஸ்டாலின் தான் தலைவர். அதனால், கூட்டணி குறித்து அவர்தான் முடிவு செய்வார். தே.மு.தி.க.,வை வரவேற்க, நாங்கள் காத்திருக்கிறோம்.
டவுட் தனபாலு: தே.மு.தி.க.,வை வரவேற்க நீங்க காத்திருக்கலாம்... ஆனா, நாளைக்கு தொகுதி பங்கீடு நடக்கிறப்ப, உங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கிட்டு, 'தே.மு.தி.க.,வுக்கு அதுல இருந்து உள் ஒதுக்கீடா கொடுத்துடுங்க'ன்னு தி.மு.க., நழுவிட்டா, உங்க பாடு திண்டாட்டமாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: தமிழ்க்கடவுள் முருகரை, தமிழை முழுமையாக போற்றும் அரசு, இந்த அரசு என்பதை முருக பக்தர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். முருக பக்தர்கள் மீது கரிசனம் கொண்டு உண்மையாகவே முருகனை தொழுகிறவர்கள் மாநாடு நடத்தினால் நிச்சயம் செல்வோம். மதுரையில் நடக்க இருப்பது, சங்கிகளால் நடத்தப்படும் மாநாடு. முருகன் மீது உண்மையான பக்தி கொண்டவர்கள் அந்த மாநாட்டிற்கு நிச்சயம் செல்ல மாட்டர்.
டவுட் தனபாலு: ஜூன் 22ல் மதுரையில் நடக்க இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில், லட்சக்கணக்கான பக்தர்கள்கூட இருக்காங்க... அவங்க எல்லாரையும் நீங்க சங்கிகள் என விமர்சித்து, அந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் அவர்களின் குடும்ப ஓட்டுகளுக்கு வேட்டு வச்சுட்டீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: மதுரையில், தி.மு.க., பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ, அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. 1977ல், மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவுக்குப் பின், 11 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சிதான் நடந்தது. மதுரையில் பொதுக்குழு நடத்தி, தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்ட தி.மு.க., இனி 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது.
டவுட் தனபாலு: அடடா... இதை, தி.மு.க., தரப்புக்கு முதல்ல யாருமே எடுத்துச் சொல்லவில்லையா... 'திருச்சியில் பொதுக்குழு நடத்துறேன்னு போட்டி போட்ட சீனியர் அமைச்சர் நேருவிடம் இருந்து, மதுரைக்கு அமைச்சர் மூர்த்தி தட்டிட்டு வந்தார்'னு அவரது ஆதரவாளர்கள் பெருமை பேசிட்டு இருந்தாங்களே... அவங்களுக்கு செல்லுார் ராஜு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துட்டாரு என்பதுல, 'டவுட்'டே இல்லை!