PUBLISHED ON : ஜூன் 18, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம சீனிவாசன்: கூட்டணி ஆட்சிக்கும், கூட்டணி கட்சிகளின் ஆட்சி என்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எனக் கூறுவது வழக்கம். அப்படித்தான், அமித் ஷாவும் கூறினார். தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைத்தாலும், அதை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்றே கூறுவோம்.
டவுட் தனபாலு: அதெப்படி...? 'இண்டியா' கூட்டணியில் தி.மு.க., அங்கம் வகித்தாலும், தமிழகத்தில் நடப்பதை இண்டியா கூட்டணி ஆட்சின்னா சொல்றாங்க... தி.மு.க., அரசுன்னு தானே சொல்றாங்க... அந்த மாதிரி, அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைத்தாலும், அதன்மீது தே.ஜ., கூட்டணி முத்திரையை குத்துவோம் என்பது சரியா என்ற, 'டவுட்' வருதே!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழக அரசியலின் வழியை தீர்மானிப்பது வி.சி.,க்கள் தான். இந்திய அரசியலை கூர்மைப்படுத்துவதும் வி.சி., தான். வி.சி., வலிமை தெரியாதவர்கள், 'திருமாவளவனுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை; பேரம் பேச தெரியவில்லை. துணை முதல்வர் பதவியை கேட்க மறுக்கிறார்' என்றெல்லாம் சொல்கின்றனர். முதல்வர் பதவிக்கே நாங்கள் ஆசைப்படவில்லை. 'பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள்' என்றுதான் அம்பேத்கர் வழிகாட்டி இருக்கிறார். அதுதான் அதிகாரமுள்ள பதவி.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது ரொம்ப சரி... தமிழகத்துல முதல்வர் நாற்காலிக்கு நிறைய போட்டி இருக்கு... முதல்வர்களுக்கு எல்லாம் தலைமை பதவியான பிரதமர் பதவிதான் உங்களுக்கு பொருத்தமா இருக்கும்... அதனால, நீங்க அந்த இலக்கை நோக்கி பயணத்தை தொடருங்க... பிரதமர் பதவி ஒருநாள் உங்களை தேடி வரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: விருதுநகரில் பட்டதாரி இளைஞர்கள் டீக்கடை துவங்கியதை செய்தித்தாளில் படித்து, என் ஊரில் நண்பருடன் டீக்கடை துவங்கினேன். சாதாரண தொண்டனான என்னை தமிழக முதல்வர் ஆக்கியவர் ஜெயலலிதா. அப்பதவியில் சிறப்பாக செயலாற்றி, அந்த பதவியை கொடுத்தவரிடமே, அதை திருப்பிக் கொடுத்ததுதான் என் வரலாறு.
டவுட் தனபாலு: ஒருமுறை அல்ல; ரெண்டு முறை ஜெ.,யிடமே முதல்வர் பதவியை திருப்பிக் கொடுத்த தியாகசீலர் நீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை... ஆனா, அதே ஜெ., மறைவுக்குப் பின், உங்களை முதல்வராக்கிய சசிகலா, அந்த பதவியை தனக்காக திருப்பிக் கேட்டப்ப, தரமறுத்து ஜெ., சமாதியில் அமர்ந்து தியானம் பண்ணியது ஏன் என்ற, 'டவுட்'டுக்கு தங்களிடம் விளக்கம் இருக்கா?