PUBLISHED ON : ஜூன் 29, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: புறநகர் ரயில் டிக்கெட், மாதாந்திர பயண அட்டை பெறுவோர், இரண்டாம் வகுப்பு பயணியருக்கான கட்டணத்தில், ரயில்வே துறை எந்த மாற்றத்தையும் செய்யப் போவதில்லை. தொலைதுார ரயில்களில், 'ஏசி' பெட்டிகளின் டிக்கெட்டுக்கு, கிலோ மீட்டருக்கு 2 காசு, 'ஏசி' வசதி இல்லாத ரயில் டிக்கெட்டுக்கு 1 காசு என, மிகக் குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டவுட் தனபாலு: ரயில் கட்டணத்தில், கி.மீ.,க்கு 2 பைசா ஏற்றுவதில் எந்த தப்பும் இல்லை... அதே நேரம் தத்கால், பிரீமியம் தத்கால்னு ஆம்னி பஸ்கள் மாதிரி பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுதே... மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தை ரத்து பண்ணி அஞ்சு வருஷமாகியும் மீண்டும் தரலையே... இந்த குறைகளை எல்லாம் சரி செய்தா, 'டவுட்'டே இல்லாம ரயில்வே துறையை பாராட்டலாம்!
மா.கம்யூ., கட்சியின் மாநிலக்குழு தீர்மானம்: மத்திய அரசு, தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை செய்துள்ளது. மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து, ஜூலை 9ம் தேதி வேலை நிறுத்தம் நடக்க உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தனியார் பங்களிப்புடன், 'டயாலிசிஸ்' சிகிச்சை செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தரமான சிகிச்சை கிடைக்காமல் போகும். தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
டவுட் தனபாலு: மத்திய அரசின் கொள்கையை கண்டித்து வேலைநிறுத்தம் நடத்தும் காம்ரேட்கள், மாநில அரசின் முடிவை கண்டித்து மயிலிறகால் வருடுவது மாதிரி எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்...? கூட்டணியில் சீட்களையும், தேர்தல் செலவுக்கான நோட்டுகளையும் குறைச்சுட்டா என்ன பண்றதுன்னு தயங்குறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: தமிழகத்தில் வரும் 2026ல் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்குள் பிரச்னை என்பதை, கனவிலும்கூட நினைத்து பார்க்க வேண்டாம். இந்த கூட்டணி உண்மையான கூட்டணி; வெல்லும் கூட்டணி. பழனிசாமி முதல்வராக பதவியேற்பார்.
டவுட் தனபாலு: பழனிசாமிக்கு முதல்வர் பதவியை விட்டு தருவீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை... ஆனா, கூட்டணி ஆட்சி என்ற உங்க கோஷத்தால இப்பவே துாக்கத்தை தொலைத்திருக்கும் பழனிசாமி, முதல்வர் நாற்காலியில் அமர்ந்தாலும், அவருக்கு அது முள் கிரீடமா தான் இருக்கும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!