PUBLISHED ON : ஜூலை 10, 2025 12:00 AM

இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் முத்தரசன்: சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராகவும்; அமைப்பு ரீதியாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருக்கிறது. இருந்தபோதும், கூட்டணி தான் முக்கியம் என்பதால், கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும், அதில் போட்டியிடுவோம். முன்னதாக பேச்சு நடத்தி நல்ல முடிவெடுப்போம்.
டவுட் தனபாலு: அது சரி... 234 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தும் அளவுக்கு உங்க கட்சி செல்வாக்கா இருக்குன்னு சொல்றீங்களே... முதல்ல, ஒரு வார்டு கவுன்சிலர் தேர்தலில் தனித்து நின்று ஜெயித்து காட்டுங்க... அப்புறமா உங்க கட்சியின் செல்வாக்கை, 'டவுட்'டே இல்லாம எல்லாரும் நம்புவாங்க!
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: 'இருளை அகற்றி, தமிழகத்தில் ஒளி வீச செய்வதே என் தீராத ஆசை' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கூறியுள்ளார். ஆனால், இருட்டில் மாட்டிக் கொண்டிருப்பது, இக்கட்டில் மாட்டிக் கொண்டிருப்பது இரண்டுமே பழனிசாமி தான்.
டவுட் தனபாலு: பழனிசாமி எந்த இக்கட்டில் மாட்டியிருக்கார்னு தெரியலை... ஆனா, கட்சியில் 2ம் இடம் நீடிக்குமா, வர்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் 'சீட்' தருவாங்களா இல்லை வயதை காரணம் காட்டி கழற்றி விட்டுருவாங்களா என்ற இக்கட்டு உங்களுக்கு வந்திருக்குன்னு தி.மு.க.,வினர் பேசிக்கிறாங்களே... அது உண்மையா என்ற, 'டவுட்'டுக்கு உங்களிடம் விளக்கம் இருக்கா?
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: தேர்தல் வாக்குறுதிகளை பொறுத்த வரை, 100க்கு 100 சதவீதம் யாராலும் நிறைவேற்ற முடியாது. தி.மு.க., அரசை பொறுத்த வரை, பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. முக்கியமான சில கோரிக்கைகள் பாக்கி உள்ளன. அதை நிறைவேற்ற வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது; மறுக்க முடியாதது. இவற்றை முதல்வர் கவனத்திற்கு சுட்டிக்காட்டி உள்ளோம். தேர்தலுக்கு முன்பாகவே, முதல்வர் அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.
டவுட் தனபாலு: விடுபட்ட மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் தர்றவங்களிடம் நிறைய பெண்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்திட்டு இருப்பது உங்களுக்கு தெரியுமா... அதனால, நிறைவேற்றப்படாத முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சியினரும் ஓட்டு கேட்டு மக்களிடம் போக முடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!