PUBLISHED ON : ஜூலை 11, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: பழனிசாமியின் சுற்றுப்பயணம் எப்படி இருக்கிறது என்பதை, மக்களும், கட்சியினரும் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்குகிறது. அதனால், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க முடிவெடுத்துள்ளேன். விரைவில், அதற்கான அறிவிப்பை வெளியிடுவேன். பொறுமையாக செய்தாலும், எதையும் பொறுப்புடன் செய்வோம்.
டவுட் தனபாலு: ஏற்கனவே, மக்களை சந்திக்க பழனிசாமி, பஸ்சை எடுத்துட்டு கிளம்பிட்டாரு... அடுத்து, ஸ்டாலினும் கிளம்ப இருக்காரு... நீங்க, ஆற அமர பொறுமையா, பொறுப்பா யோசித்து பயணம் கிளம்புறதுக்குள்ள தேர்தலே முடிஞ்சிடுமோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: திருச்சி, மணப்பாறை அருகே, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், மது போதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. 'டாஸ்மாக்'கை நம்பி மட்டுமே மொத்த அரசும் இயங்கும் தி.மு.க., ஆட்சியில், வகுப்பறைகள் வரை சாராய வெள்ளம் பாயத்தானே செய்யும். கையில் மது புட்டியுடன் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்களை கொண்ட சமூகத்தில், மாணவர் கைகளில் பயங்கர ஆயுதங்கள் புழங்குவதை எப்படி தடுக்க முடியும்.
டவுட் தனபாலு: மாதா, பிதாவுக்கு அடுத்து வரும் குருவாக இருப்பவர் ஆசிரியர்... அவரே இப்படி அலங்கோலமா நடந்துக்கிட்டா, அவரிடம் படிக்கிற பசங்களின் எதிர்காலம் என்னவாகும்... இந்த மாதிரி ஆசிரியர்களின் சீட்டை கிழித்து உடனே வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே, இது போன்ற அவலங்கள் குறையும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: பணி நிரந்தரம் கோரி, போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள், தி.மு.க., அரசால் அராஜக போக்குடன் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 2021 தேர்தலின் போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், 'ஆட்சி அமைந்ததும், பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை தி.மு.க., நிறைவேற்றும்' என்று படித்த துண்டுச்சீட்டு இப்போது தொலைந்து விட்டதா?
டவுட் தனபாலு: பார்த்து, ஜாக்கிரதையா பேசுங்க... இன்னும் எட்டு மாசத்துல தேர்தல் வருது... அதுல, ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, நீங்க முதல்வராகிட்டால், இன்று ஸ்டாலினை நோக்கி நீங்க கேட்கிற கேள்விகளை, நாளைக்கு அவர் உங்களை பார்த்து கேட்பாரு என்பதில், 'டவுட்'டே இல்லை!