PUBLISHED ON : ஜூலை 15, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: கடந்த 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க.,வுக்கு மூன்று எம்.பி.,க்கள் கிடைத்தனர். அதற்கு முன், ம.தி.மு.க.,வுக்கு எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கிடையாது. ம.தி.மு.க.,வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்ததற்கே, ஜெயலலிதா தான் காரணம். இந்த நன்றியை மறந்துவிட்டு, கொஞ்சம்கூட வாய் கூசாமல் வைகோ பேசுவது நல்லதல்ல.
டவுட் தனபாலு: நீங்க சொல்வது வாஸ்தவம் தான்... அதேபோல, இப்ப அங்கீகாரத்தை இழந்து பரிதவிச்சுட்டு இருக்கிற ம.தி.மு.க., திரும்பவும் உங்க கூட்டணிக்கு வந்தால் ஏத்துக்குவீங்களா... அவங்க அங்கீகாரம் பெற தேவையான அளவுக்கு தாராளமா தொகுதிகளை பங்கிட்டு தருவீங்களா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்: ஆடு, மாடுகளுக்கு மாநாடு நடத்தும் அளவுக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் நிலை ஆகிவிட்டது என்பதை நினைக்கும்போதே பரிதாபமாக இருக்கிறது. அவர், மனிதனையே மனிதனாக நினைத்து பேச மாட்டார்; வாய்க்கு வந்தபடி பேசுவார். அதன் உச்சமாக, மதுரையில் ஆடு, மாடுகளுக்கு முன் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது அரசியல், கடைசி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது.
டவுட் தனபாலு: 'வாயில்லா ஜீவன்களுக்கும் மனம் இருக்கு'ன்னு கருதி, அவற்றை முன்னாடி நிறுத்தி சீமான் பேசியிருக்காரு... ஆடு, மாடுகளுக்கு மட்டும் ஓட்டுரிமை இருந்திருந்தால், எல்லா அரசியல்வாதிகளும், அதுக்கும் ஒரு மாநாடு போட்டு முழங்கியிருப்பீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தி.மு.க., மாணவர் அணி செயலர் ராஜிவ் காந்தி: த.வெ.க., தலைவர் விஜய், அரசியல் உள்நோக்கத்தோடு மாணவ -- மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கு கிறார். தமிழகத்தில் பிறந்து, தமிழ் சினிமா மூலம், 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். வடமாநிலங்களில் விஜய் பிறந்திருந்தால், பானி பூரி விற்க தமிழகத்துக்கு வந்திருப்பார்.
டவுட் தனபாலு: ஏன், வட மாநிலங்களில் விஜய் பிறந்திருந்தால், 'பாலிவுட்' சினிமாக்களில் ஹீரோவாகி, 500 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்க மாட்டாரா... நீங்க விஜயை கிண்டல் பண்றதா நினைச்சு, 'வட மாநிலத்தவர்கள் எல்லாருமே பானி பூரி விற்கத்தான் லாயக்கு'ன்னு மட்டம் தட்டிட்டீங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!