PUBLISHED ON : ஜூலை 17, 2025 12:00 AM

அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி: அ.தி.மு.க.,வை பொறுத்த வரை கட்சி கொள்கை மற்றும் மக்களின் தீர்ப்பே வேதவாக்கு. கூட்டணி என்பது வேறு; ஆட்சி அமைப்பது என்பது வேறு. பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் பல்வேறு கருத்துகள் வரலாம். அ.தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என, எங்கள் பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதுவே எங்கள் வேதவாக்கு.
- டவுட் தனபாலு: அமித் ஷா, 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான்'னு உறுதியா சொல்றாரு... நீங்க, 'தனித்து ஆட்சி'ன்னு திரும்ப திரும்ப சொல்றீங்க... பா.ஜ., மேலிடத்திடம் பேசி, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டு, வாக்காளர்களை சந்தித்தால் தான், தேர்தலில் தே.ஜ., கூட்டணி கரையேறும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: திருவள்ளுவர் புலவர் மட்டுமல்ல; புரட்சியாளர்; கவிஞர் மட்டுமல்ல; கலகக்காரர். அவர் வழங்கியிருக்கும் வள்ளுவத்தை பரப்ப வேண்டியது நம் கடமை மட்டுமல்ல; காலத்தின் தேவை. திருக்குறளை படித்தால் மட்டும் போதாது; அதன்படி நடக்க வேண்டும் என்ற உணர்வை இளைஞர்களுக்கு ஊட்ட வேண்டும். இதற்காக, தி.மு.க., அரசு ஏராளமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
டவுட் தனபாலு: வள்ளுவர், 'கள்ளுண்ணாமை' என்ற தலைப்பில், 10 குறள்களை வடித்து, அதற்கு உங்க தந்தை உட்பட பலரும் உரை எழுதியிருக்காங்களே... வள்ளுவர் வாக்குப்படி முதலில் அரசை நடத்திட்டு, அதாவது, 'டாஸ்மாக்'கை இழுத்து மூடிட்டு, இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினால், 'டவுட்'டே இல்லாம உங்களை பாராட்டலாம்!
: தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுதி.மு.க., ஆட்சியில் இதுவரை, 3,325 கோவில்களில் குடமுழுக்கு
நடந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், 3,500 கோவில்களில் குடமுழுக்கு
நடத்தப்படும். சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையை
அகலப்படுத்தும் பணியில், நிலம் கையகப்படுத்த அரசின் சார்பில், 60 கோடி
ரூபாய் மானியமாக முதல்வர் வழங்கியுள்ளார். சுவாமி மலை, மருதமலை
கோவில்களில், 'லிப்ட்' அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
டவுட்
தனபாலு: அறநிலையத் துறை சார்பில், கோவில் பணிகள் எல்லாம் போர்க்கால
வேகத்தில் நடப்பது பாராட்டுக்குரியது தான்... ஆனாலும், நிஜமான ஆன்மிக
அக்கறையில் தான் இதை எல்லாம் செய்றீங்களா அல்லது தேர்தலில் ஹிந்துக்கள்
ஓட்டுகளை அள்ளும் முயற்சியில் அவசர அவசரமா எல்லாத்தையும் பண்றீங்களா என்ற,
'டவுட்'டும் கூடவே வருது!