PUBLISHED ON : ஜூலை 18, 2025 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி:தமிழக அரசு பள்ளிகளில், 5,000 ரூபாய் மாத சம்பளத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, 13 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களை அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதை செய்ய மறுத்தால், தி.மு.க., அரசுக்கு சட்டசபை தேர்தலில் அவர்கள் பாடம் புகட்டுவது உறுதி.
டவுட் தனபாலு: பகுதி நேர ஆசிரியர்கள், 13 வருஷமா போராடிட்டு இருப்பதா சொல்றீங்களே... அப்படி பார்த்தால், அவங்களை பணி நிரந்தரம் செய்யாம விட்டதுல, இதுக்கு முன்பிருந்த அ.தி.மு.க., ஆட்சிக்கும் பங்கிருக்கே... அ.தி.மு.க., வுடன் கூட்டணி சேர துடிப்பதால், தி.மு.க., அரசு மீது மட்டும் பாயுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: பள்ளிகளில், 68,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போதிய வகுப்பறைகள் இல்லை; கழிப்பறை வசதி இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், 'ப' வடிவில் மாணவர்களை அமர வைத்தால் போதுமா? கடைசி பெஞ்ச் மாணவர்கள் படிக்க மாட்டார்கள் என்பது என்ன, 'கான்செப்ட்' என்று தெரியவில்லை. பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை நீக்கிவிட்டு, வேறு யாரையாவது நியமிக்கலாம்.
டவுட் தனபாலு: இந்த ஆட்சிக்கு இன்னும் ஏழெட்டு மாதம் தான் ஆயுட்காலம் இருக்கு... இப்ப, அமைச்சரை மாத்தி, புதுசா ஒருத்தரை போட்டாலும், அவர் துறையை பத்தி தெரிஞ்சுக்கவே ஆறு மாதமாகிடும்... அதுக்குள்ள தேர்தலே வந்துடும்... தேர்தல் முடிந்து அமையும் புதிய ஆட்சியில் தான் பள்ளிக்கல்வித் துறைக்கு விடிவுகாலம் பிறக்குமோ என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: கூடுதல் தலைமைச் செயலர் அமுதா, '1.50 கோடி பேரிடம் மனுக்கள் வாங்கினோம். அதில், 1.10 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது' என, தெரிவித்து உள்ளார். அப்படியென்றால், எந்தெந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது என்ற விபரத்தையும் சொல்ல வேண்டும். யார் தவறாக தகவல் சொன்னாலும், அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
டவுட் தனபாலு: சரியா போச்சு... அதிகாரிகள், அவங்க சுயவிருப்பத்திலா பணி செய்யுறாங்க... ஆட்சியாளர்கள் சொல்வதை தானே அவங்களால செய்ய முடியும்... நீங்களும் பல வருஷங்கள் அமைச்சர்,நாலு வருஷம் முதல்வர் பதவியில இருந்திருக்கீங்களே... அதிகாரிகளின் சுதந்திரம் பத்தி உங்களுக்கு தெரியாதா என்ற, 'டவுட்'தான் வருது!