PUBLISHED ON : ஜூலை 24, 2025 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: கல்லுாரிகளில், 'ஓரணி யில் தமிழகம்' என, தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு துண்டறிக்கை வினியோகிப்பது கடும் கண்டனத்துக்குரியது. கட்சி கொடியுடன், கல்லுாரி வாயில்களை மறித்து கும்பலாக நிற்கும், தி.மு.க.,வினரை கடந்து செல்லவே அச்சப்படுவதாக மாணவ - மாணவியர் தெரிவித்துள்ளனர்; இது அதிகார துஷ்பிரயோகம். தி.மு.க.,வினரின் இத்தகைய செயல், கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் என, முதல்வருக்கு தெரியவில்லையா?
டவுட் தனபாலு: மொத்தம், 2.50 கோடி வாக்காளர்களை உறுப்பினர்களா சேர்க்கணும்னு தலைமை இலக்கு நிர்ணயித்திருப்பதால், தி.மு.க.,வினருக்கும் வேறு வழியில்லையே... அதே நேரம், இப்படி பிள்ளை பிடிக்கிற கணக்கா உறுப்பினர்களை சேர்ப்பது, தேர்தலில் தி.மு.க.,வுக்கு பலன் அளிக்குமா என்பது, 'டவுட்'தான்!
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்தது, அக்கட்சியிலேயே யாருக்கும் பிடிக்கவில்லை என, பல நாட்களாக சொல்லி வருகிறோம். அக்கட்சியில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தி.மு.க.,வுக்கு வந்திருப்பதில் இருந்தே, உண்மை நிலையை உணர்ந்து கொள்ளலாம். அன்வர் ராஜா மனநிலையிலேயே இன்னும் பலர், அ.தி.மு.க.,வில் உள்ளனர். அவர்களும் அடுத்தடுத்து, அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவர்; ஆனால், அவர்கள் தி.மு.க.,வில் இணைவரா என்பது தெரியாது.
டவுட் தனபாலு: நீங்க, தி.மு.க., வின் பொதுச்செயலராக இரண்டாம் இடத்தில் இருக்கீங்க... 'அ.தி.மு.க.,வில் இருந்து வருவோரை இருகரம் நீட்டி வரவேற்கிறேன்' என்றல்லவா அழைப்பு விடுக்கணும்... 'வந்தால் வாங்க, வராவிட்டால் போங்க' என்ற ரீதியில் பேசுவதை பார்த்தால், தலைமை மீது அதிருப்தியில் இருக்கீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'டாஸ்மாக்'கில் கொள்ளையோ கொள்ளை நடக்கிறது. பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதல் வசூல் என்ற வகையில், ஒரு நாளைக்கு, 15 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆண்டிற்கு, 5,400 கோடி ரூபாய் ஆட்சி மேலிடத்துக்கு போவதாக தகவல். இதில் ஊழல் செய்த அனைவர் மீதும், அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.
டவுட் தனபாலு: 'டாஸ்மாக்'கில் ஊழல் செய்தவங்க மீது நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்றீங்களே... நீங்க சொல்வது போல நேர்மையான முறையில நடவடிக்கை எடுத்தால், டாஸ்மாக்கில் தலைமை அதிகாரி துவங்கி, அடிமட்ட ஊழியர்கள் வரை யாருமே பணியில் இருக்க முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!