
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: முதல்வர் ஸ்டாலினிடம் உடல் நலம் விசாரித்தோம். முதல்வர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்; ' நன்றாக இருக்கிறேன்' என்றார். சீக்கிரம் அவர் குணமடைய வாழ்த்து தெரிவித்தோம். இது, நட்பு ரீதியிலான, குடும்ப ரீதியிலான சந்திப்பு மட்டும் தான். அவரை சந்தித்ததில், 100 சதவீதம் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. யாருடன் கூட்டணி என்பதை தற்போது கூற முடியாது. கூட்டணி பற்றி நேரம் வரும் போது அறிவிப்பேன்.
டவுட் தனபாலு: சில நேரம், தமிழக அரசை காட்டமா விமர்சிக்குறீங்க... அப்புறமா அதுல இருந்து பின்வாங்கி, தி.மு.க.,வுடன் நட்பு பாராட்டுறீங்க... முதல்வரும் எதையும் மனசுல வச்சுக்காம, நீங்க கேட்டதுமே, உங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தர்றாரு... எல்லாம் தேர்தல் பண்ணும் மாயம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: ஜெயலலிதாவின் நேரடி பார்வையில், 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்; எனக்கு அனைத்தும் தெரியும். அரசியலில் எனக்கென்று தனி மரியாதை உள்ளது. பா.ஜ., தலைவர்கள் சமீபத்தில் என்னை சந்திக்கவில்லை. மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை எனக் கூறி, தமிழகத்திற்கான கல்வி நிதியை தர மறுக்கும் மத்திய அரசின் செயல் சரியல்ல; அதனால் தான், மத்திய அரசை விமர்சிக்கிறேன்.
டவுட் தனபாலு: தமிழகத்துக்கான கல்வி நிதியை தராம, மத்திய அரசு ஒரு வருஷமா இழுத்தடிச்சிட்டு இருக்கு... ஆனா, தமிழகம் வந்த பிரதமர் மோடி, உங்களை சந்திக்காம போன பிறகு தான், நிதி தராத விஷயம் உங்க கவனத்துக்கு வந்து, மத்திய அரசை விமர்சிக்குறீங்களா என்ற, 'டவுட்' வருதே!
தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவர் நல்லுசாமி: தென் மாநிலங்கள் சிலவற்றில் கள் இறக்கவும், விற்பனைக்கும் அனுமதி இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் அனுமதிக்க மறுக்கின்றனர்... கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். அப்படி நீக்கினால் மட்டுமே, வரும் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
டவுட் தனபாலு: 'கள்ளுக்கு அனுமதி தருவேன்'னு எந்த வாக்குறுதியும் தராமல் தானே, 2021 சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் ஜெயிச்சாரு... அதனால, 2026 சட்டசபை தேர்தல்ல கள்ளுக்கு அனுமதி கிடைக்கும்னு எதிர்பார்த்தா, நீங்க ஏமாந்து தான் போவீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!