
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: கடந்த கால அ.தி.மு.க., ஆட்சியில், 'அம்மா உப்பு' என பெயர் வைத்து, 10 கடைகளில் தான் உப்பு விற்கப்பட்டது. 'அம்மா குடிநீர்' என துவங்கி, பஸ் நிலையங்களில் மட்டும் விற்பனை செய்தனர். சாலையோர பூங்காவுக்கு, தலா, 2 லட்சம் ரூபாய் செலவிட்டு, 'அம்மா பூங்கா' என பெயர் வைத்தனர். லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறும், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தால், தி.மு.க.,வுக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. அந்த காழ்ப்புணர்ச்சியால் அந்த திட்டத்துக்கு எதிராக, அ.தி.மு.க., வழக்கு தொடர்ந்து, தோல்வியை சந்தித்திருக்கிறது.
டவுட் தனபாலு: அங்க தான் , அ.தி.மு.க.,வினரின் புத்தி சாலித்தனம் இருக்குது... 'அம்மா' என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவான வார்த்தை என்பதால், அதை யாராலும் எதிர்க்க முடியலை... நீங்களும், 'நலம் காக்கும் அப்பா' என திட்டத்துக்கு பெயர் சூட்டியிருந்தால், யாராலும் எதிர்த்திருக்க முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: 'வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான், அமைச்சர் துரைமுருகனை தி.மு.க., ஒதுக்குகிறது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறி உள்ளார். நான் ஒதுக்கப்படுகிறேனா, இல்லையா என்பதை நான் தான் சொல்ல வேண்டும்; அன்புமணி அல்ல.
டவுட் தனபாலு: 'என்னை யாரும் ஒதுக்கவில்லை... கட்சியிலும், ஆட்சியிலும் உரிய மரியாதையும், கவுரவமும் எனக்கு தரப்படுது' என்றல்லவா உங்களுடைய பதிலடி இருந்திருக்கணும்... அதை விட்டுட்டு, இப்படி பூசி மொழுகுவதை பார்த்தால், 'ஒதுக்கப்படுவது உண்மை தான்... ஆனா, அதை வெளியில சொல்ல முடியாத சூழலில் இருக்கேன்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: நடிகர் விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதற்குள், ஆண வ படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என, எதிர்பார்க்க முடியாது. அவர் முதலில் களத்திற்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும். அதன்பின், அடுத்தடுத்து அவரின் செயல்பாடுகளை பார்த்தே கருத்து கூற முடியும்.
டவுட் தனபாலு: ஆணவ படுகொலைக்கு எதிராக கருத்து தெரிவிக்க, அரசியலில் சீனியர், ஜூனியர் பேதம் இருக்கா என்ன... ஆணவ கொலை தொடர்பான செய்திகளை, அவரது கவனத்துக்கு கட்சி நிர்வாகிகள் யாரும் எடுத்துட்டு போகாம விட்டுட்டாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!