PUBLISHED ON : ஆக 11, 2025 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: என் மகன் அன்புமணியின் மாமனாரும், தமிழக காங்., முன்னாள் தலைவருமான கிருஷ்ணசாமியை சந்தித்து, நடந்த சம்பவங்களை ஒரு மணி நேரம் எடுத்து கூறினேன். அதன் பின், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதே போல, அன்புமணியின் மைத்துனரும், கடலுார் தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யுமான விஷ்ணு பிரசாத்தை, நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'நேரில் வாருங்கள், பேச வேண்டும்' என்றேன். 'வருகிறேன்' என்று சொன்னவர் , வரவேயில்லை.
டவுட் தனபாலு: அடடா... வழக்கமா, பெண் குடுத்தவங்க தான், மாப்பிள்ளையின் தந்தையிடம் புகார் பத்திரம் வாசித்து, 'உங்க மகனுக்கு கொஞ்சம் புத்தி சொல்லுங்க'ன்னு கேட்பாங்க... உங்க விவகாரத்துல நிலைமை தலைகீழா இருக்கே... உங்க மகன் மட்டுமில்ல... உங்க சம்பந்தி வீட்டாரும் உங்களை புறக்கணிக்கிறாங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
ஹிந்து முன்னணி அமைப்பின் தமிழக பொதுச்செயலர் கிஷோர்குமார்: பொதுமக்களுக்காக, இரவு, பகல் பாராமல் போலீசார் வேலை செய்கின்றனர். ஆனால், போலீசார் மரணத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு சங்கம் இருக்கும் போது, போலீசாருக்கும் தங்கள் கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் சங்கம் வேண்டும்.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது வாஸ்தவம் தான்... ஆனா, தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், போலீசாருக்கு சங்கம் அமைக்க அனுமதி தர கூடாது என்பதில் மட்டும், ரெண்டு கட்சிகளும் ஒற்றுமையாகவே இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: நடிகர் விஜயின், தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில், அ.தி.மு.க., இறங்கியுள்ளது. இதற்காக, த.வெ.க.,வின் முக்கிய தலைவர்கள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆதரவாளர்கள் வாயிலாக இரு முறை பேச்சு நடத்தியுள்ளனர். தற்போது, த.வெ.க.,வுக்கு, 40 சட்ட சபை தொகுதிகள் வரை ஒதுக்க, பழனி சாமி முன்வந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பேச்சு விறுவிறுப்படைந்து உள்ளது.
டவுட் தனபாலு: 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பது போல, தனித்து போட்டி என்பதில் உடும்பு பிடியாக இருக்கும் விஜயை, கூட்டணி வலைக்குள் இழுத்துடுவாங்க போல தெரியுதே... அதே நேரம், 2011ல் அ.தி.மு.க., கூட்டணிக்குள்ள போன விஜயகாந்த் கட்சியின் கதியை, விஜய் நினைச்சு பார்க்கலையோ என்ற, 'டவுட்' வருதே!