
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த்: நாம் விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநாட்டுக்கு பின், கட்சி தலைவர் விஜயை, உண்மையான எதிர்க்கட்சி தலைவராக மக்கள் ஏற்று கொண்டனர். அடுத்ததாக மதுரையில் நடக்கவிருக்கும் மாநாடு முடிந்த பின், அவரை முதல்வராகவே மக்கள் ஏற்றுக் கொள்வர்.
டவுட் தனபாலு: பேசாம இன்னும் ஒரு மாநாட்டையும் சேர்த்து நடத்திடுங்களேன்... விஜய், பிரதமராகவே ஆகிடுவார்... கிராமங்கள்ல, 'நெனப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்'னு ஒரு பழமொழி சொல்வாங்க... அதுக்கு ஆகச்சிறந்த உதாரணம் நீங்கதான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: அ.தி.மு.க., மாவட்ட செயலர்களில் பலர் சீனியர்கள் என்பதால், அவர்கள் களப்பணிக்கு செல்வதில்லை. ஜெயலலிதா இருந்தபோது இருந்த வேகம், உழைப்பு இப்போது அவர்களிடம் இல்லை. கட்சியின் பொதுச்செயலர் என்ற முறையில் பழனிசாமி அதிகாரம் செலுத்த முயன்றாலும், அதை சீனியர்கள் விரும்பவில்லை. இவர்களை வைத்து எதிர்பார்த்த அளவுக்கு கட்சி பணிகளை செய்ய முடியவில்லை என்பதால், கட்சி ரீதியாக மாவட்டங்களை மேலும் பிரித்து, புதிய மாவட்டங்களை ஏற்படுத்தி, அவற்றில் தன் ஆதரவாளர்களை செயலர்களாக நியமிக்க பழனிசாமி முடிவெடுத்துள்ளார்.
டவுட் தனபாலு: தி.மு.க.,வில் உதயநிதி கண்காணிப்பில், நிறைய இளைஞர்களை மாவட்ட செயலர்களா நியமிச்சிருக்காங்க... அவங்களும் துடிப்புடன் கட்சி பணியாற்றி வர்றாங்க... அ.தி.மு.க.,வில் இளைஞர்களுக்கு வழிவிடாம நந்தியாக சீனியர்கள் நின்னுட்டு இருந்தால், தேர்தல் வெற்றிக்கு பங்கம் வந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
மா.கம்யூ., கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன்: மின்சாரம், போக்குவரத்து துறையை பொறுத்தவரை லாபம், நஷ்டம் பார்க்கக்கூடாது. அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும். இதில், தனியார் மயமாக்கல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், தற்போது கொஞ்சம், கொஞ்சமாக தனியார் மயமாக்கல் நுழைக்கப்படுகிறது. தமிழகத் தி ன் மின் உற்பத்தியில், 52 சதவீதம் தனியார் மூலம் நடக்கிறது.
டவுட் தனபாலு: இப்ப, 52 சதவீதமா இருக்கும் தனியார் மின் உற்பத்தி, தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 100 சதவீதமாக மாறிடுமோ என்ற, 'டவுட்' வருது... தனியார் மயத்துக்கு எதிரான கம்யூ.,க்கள் இதை எதிர்த்து பொங்கி எழாமல், கூட்டணி தர்மத்துக்காக அடக்கி வாசிக்கணுமா என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!