
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா:
தே.மு.தி.க., தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை; நடுநிலை வகிக்கிறோம். வரும் ஜன., 9ல், கடலுார் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம். தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்த மூன்றாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க., உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், மகத்தான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.
டவுட் தனபாலு:
காங்., - பா.ஜ., கட்சிகளும், போன வருஷம் துவங்கிய நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும், 'நாங்க தான் மூணாவது பெரிய கட்சி'ன்னு மார்தட்டிக்கிறாங்க... நீங்களும், அந்த போட்டியில குதிச்சிருக்கீங்களே... ஆனா, மூணாவது இடம் யாருக்கு என்பதை தமிழக வாக்காளர்கள் தான் தீர்மானிக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ:
எனக்கு மத்திய அமைச்ச ராகும் வாய்ப்பு பலமுறை வந்த போதும் நான் அதை விரும்பியதில்லை. இதுவரை சல்லிக் காசு கூட எவரிடத்திலும் கைநீட்டி வாங்கியது இல்லை. நாணயம், நேர்மை, உண்மை தான் என் கவசம்; அதை என் றும் இழக்க மாட்டேன். எந்த கூட்டணியில் உள்ளோமோ, அங்கு நன்றியும், விசுவாசமும் உள்ளவர்களாக இருப்போம். மனப்பூர்வமாக தி.மு.க.,வுடன் கைகோர்த்து பணியாற்றுகிறோம். எத்தனை, 'சீட்' கிடைக்கும் என கணக்கு போட்டு கூட்டணியில் இருக்கவில்லை.
டவுட் தனபாலு:
இதன் மூலமாக, 'கூட்டணியில் இருக்கும் வி.சி., - கம்யூ., - காங்., கட்சிகள் எல்லாம் சீட் கணக்குக்காகவே தி.மு.க., கூட்டணியில் ஒட்டி கொண்டிருக்கின்றன... எங்களுக்கு சீட்களே ஒதுக்காம போனாலும், நாங்க தி.மு.க., கூட்டணியை விட்டு போக மாட்டோம்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:
கல்வி , போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்டவற்றை தனியாரிடம் கொடுத்துவிட்டு, மதுபான கடைகளை மட்டும் அரசே நடத்தும் என்பதை சமூகம் ஏற்றுக் கொள்கிறதா? மகளிர் உரிமைத்தொகை, மாணவர்களுக்கு உதவித்தொகை தருகின்றனர். அதிக செலவில் நுாலகம், கலையரங்கம் கட்டு கின்றனர். ஆனால், நிதி பற்றாக்குறை என்கின்றனர்.
டவுட் தனபாலு:
பொதுவாக, அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடுவதையும், தனியார் நிறுவனங்கள் லாபத்தில் ஓடுவதையும் தான் பார்த்திருக்கிறோம்... உதாரணத்துக்கு, போக்குவரத்து கழகங்களை சொல்லலாம்... ஆனா, 'டாஸ்மாக்' மது விற்பனை அரசுகிட்ட வந்த பிறகு தான், அதன் விற்பனை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!