
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி : வரும், 2026 சட்டசபை தேர்தலில், புதிய தமிழகம் கட்சி கூட்டணி அமைத்து தான் போட்டி யிடும். ஆனால், இயந்திரத்தனமாக கூட்டணி அமைக்க மாட்டோம். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு பெறக்கூடிய முக்கியமான கொள்கையோடு தான் கூட்டணி அமைப்போம்.
டவுட் தனபாலு: தங்களுடன் பல வருஷங்களா கூட்டணியில் நீடிக்கும் பெரிய பெரிய கட்சி களுக்கே, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தர மாட்டோம்னு தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தெளிவாகவே சொல்லிடுச்சு... தமிழக வெற்றிக் கழகம் தான், 'ஆட்சியில் பங்கு'ன்னு அறிவிச்சிருக்காங்க... ஆனா, அந்த கூட்டணியில் உங்களுக்கு வரவேற்பு இருக்குமா என்பது, 'டவுட்'தான்!
மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன்: பா.ஜ.,வை வீழ்த்தும் கூட்டணியில் தான் நாங்கள் இடம் பெற்றிருக்கி றோம். அதற்காக, மக்களை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் தி.மு.க., அரசு ஈடுபட்டால், துணிச்சலோடு அரசை எதிர்த்து போராடுவோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து என்றைக்கும் மாற மாட்டோம்.
டவுட் தனபாலு: உங்க கட்சியின் அடையாளமே போராட்டம் தானே ... அதனால, 'போராட்டம் நடத்திட்டோம்'னு பதிவு பண்ணிட்டு போயிடுறீங்க... அடுத்தடுத்து பிரச்னைகள் அணிவகுத்து வர, அதுக்கும் போராட்டம்னு கிளம்பி போயிடுறீங்களே தவிர, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க உருப்படியா எதையாவது செஞ்சிருக்கீங்களா என்ற, 'டவுட்' வருதே!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், விவசாய தொழிலாளர்கள், மலைவாழ் மக்களுக்கு, இப்போது கட்டும் வீடு மாதிரி இல்லாமல், அற்புதமான கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்படும். வீட்டுமனை இல்லாவிட்டால், அதை வாங்கி தந்து வீடு கட்டி கொடுப்போம். மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைந்ததும், தீபாவளி பண்டிகையின்போது பெண்களுக்கு அற்புதமான இலவச சேலைகள் வழங்கப்படும்.
டவுட் தனபாலு: அடடா... ஆட்சியை பிடிக்கிறதுக்காக எப்படி எல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசுறீங்க... தேர்தல் நெருங்க நெருங்க, 'மனை வாங்கி, அதுல வீடும் கட்டி கொடுத்து, பீரோ, கட்டில், மெத்தை, பர்னிச்சர், பிரிஜ், வாஷிங் மிஷின் எல்லாம் வாங்கி தருவோம்'னு கூட வாக்குறுதி தருவீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!