
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: தி.மு.க., ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகளுக்கு பின், முதியோரின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை ஏன் செயல்படுத்த வேண்டும்? வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிகளில் தோற்கும். தோல்வி பயத்தில் திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
டவுட் தனபாலு: 'வீடு தேடி ரேஷன் பொருள்' திட்டமும் கூட, தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்தின் திட்டம் தானே... சொந்தமா தந்த வாக்குறுதிகளை தான் நிறைவேற்ற முடியலை... மாற்று கட்சியினர் தந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றி, அவங்களை கூட்டணிக்குள்ள இழுத்து, தேர்தல்ல ஜெயிக்கலாம்னு நினைக்கிறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: எங்கள் கட்சியின் நிறுவனர் விஜயகாந்த், முதல் தேர்தல் அறிக்கையிலேயே, 'வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்' என, அறிவித்தார். அவரது கனவு திட்டத்தை, 'தாயுமானவர்' திட்டம் என்ற பெயரில், தி.மு.க., அரசு செயல்படுத்தி உள்ளது. இது, தே.மு.தி.க.,வுக்கு கிடைத்த வெற்றி. அதற்காக, முதல்வருக்கு நன்றி.
டவுட் தனபாலு: மகளிர் உரிமைத்தொகை என்பது, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்த திட்டம்... அதை, தி.மு.க., தத்து எடுத்து செயல்படுத்திட்டு இருக்கு... இப்ப, வீடு தேடி ரேஷன் திட்டத்தையும், உங்களிடம் இருந்து எடுத்திருக்காங்க... இதனால, தி.மு.க.,வினருக்கு புதுசா ஒன்றும் யோசிக்க தெரியலையோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இருக்கும் நட்பு, தேர்தலுக்கான நட்பு அல்ல. அரசியலில் லாபம், நஷ்டம் பார்க்கும் நட்பும் அல்ல. நமக்குள் இருப்பது கொள்கை நட்பு. இங்கு யாரும், யாருக்கும் அடிமை அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், ஊடகங்களில் தெரிவிக்கும் கருத்துகளை கேட்கிறேன். அவர்கள் சுட்டிக்காட்டுவதில், உடன்பாடானது எது என அறிந்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கிறேன். கூட்டணியில் இருக்கிறோம் என, அவர்கள் சுட்டிக்காட்டாமல் இருந்ததில்லை; அவர்கள் சுட்டிக்காட்டியதை நானும் புறக்கணித்தது இல்லை.
டவுட் தனபாலு: அது சரி... ஆனா, '2021 சட்டசபை தேர்தலின்போது தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்க'ன்னு கூடத்தான் கம்யூ.,க்கள் அடிக்கடி சொல்றாங்க... அதை மட்டும் ஏன் காதுலயே போட்டுக்க மாட்டேங்கிறீங்க என்ற, 'டவுட்' வருதே!