
பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில், 35 மாவட்டங்களை சேர்ந்த, 207 பள்ளிகளில், ஒரு மாணவர் கூட இல்லை என கூறி, அப்பள்ளிகளை தி.மு.க., அரசு மூடும் செய்தி அதிர்ச்சி அளிக்கின்றன. மொத்தம், 37,554 அரசு பள்ளிகளில், 52.75 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக் கின்றனர். ஆனால், 12,970 தனியார் பள்ளிகளில், 63.42 லட்சம் மாணவர்கள் படிக் கின்றனர். இதற்கான தீர்வு, அரசு பள்ளிகள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பது தானே தவிர, பள்ளிகளை மூடுவது அல்ல.
டவுட் தனபாலு: நீங்க சொல்ற, 12,970 தனியார் பள்ளிகள்ல படிக்கிற மாணவர்கள் தான், பொதுத் தேர்வுகளில் பெருமளவில் சாதிக்கிறாங்க... பல இலவசங்களை கொடுத்தும், அரசு பள்ளி மாணவர்கள் சொற்ப அளவில் தான் ஜொலிக்கிறாங்க என்றால், தப்பு எங்கே இருக்கு என்பதை அரசு ஆராயணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: 'சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி என, நான்கு பிரபல நடிகர்கள் உள்ள குடும்பத்தில் ஒருவர் கோவையில் போட்டியிட்டால், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை வீழ்த்தலாம்' என, முதல்வர் ஸ்டாலின் நினைக் கிறார். சிவகுமார், கொங்கு மண்டலத்தில் பிரதானமாக இருக்கும் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஜாதி பின்புலமும், தி.மு.க.,வுக்கு கைகொடுக்கும் என கணக்கு போட்டு, தி.மு.க., காய் நகர்த்துகிறது.
டவுட் தனபாலு: 'எதை தின்றால் பித்தம் தெளியும்' என்ற கதையா அல்லவா இருக்கு... விஜயை சமாளிக்க, இந்த மாதிரி குண்டக்க மண்டக்க ஐடியாக்களை முதல்வருக்கு யார் தர்றாங்கன்னு தெரியலையே... இவங்க ஆயிரம் திட்டங்கள் போடலாம்... ஆனா, சிவகுமார் குடும்பம் இவங்க வலையில சிக்குமா என்பது, 'டவுட்'தான்!
மது, போதை ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சி.மகேந்திரன்: தொட்டிய நாயக்க சமூகத்தினர் வாழும், 1,000க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், மது பயன்பாடு இல்லை. இதுபோல், பல்வேறு சமூகங்கள், போதை, மது பழக்க வழக்கங்களில் இருந்து, தங்களை பாதுகாத்து கொள்கின்றன. இதையடுத்து மது, போதை ஒழிப்பில் அக்கறை கொண்ட மக்களை ஒருங்கிணைத்து, ஒரு இயக்கமாக உருவாக்க முயற்சித்து வருகிறோம்.
டவுட் தனபாலு: நீங்க வேற... '1,000க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள்ல மது பழக்கம் இல்லையா... டாஸ்மாக் அதிகாரிகள், கடமையை சரியா செய்யலை'ன்னு, அவங்களுக்கு விளக்கம் கேட்டு அரசு நோட்டீஸ் குடுத்தாலும் குடுத்துடும்... அதனால, இந்த மாதிரி நல்ல விஷயங்களை எல்லாம் ரகசிய மாகவே வச்சுக்கணும் என்பதில் , 'டவுட்'டே இல்லை!

