PUBLISHED ON : செப் 06, 2025 12:00 AM

தமிழக துணை முதல்வர் உதயநிதி: வதந்திகளில் இரண்டு வகை உள்ளது. 'மிஸ் இன்பர்மேஷன், டிஸ் இன்பர்மேஷன்' என்ற இரண்டும் உலக அளவில் பெரிய ஆபத்தாக உள்ளன. 'மிஸ் இன்பர்மேஷன்' என்பது உள்நோக்கம் இல்லாமல் பரவும் செய்தி. ஆனால், 'டிஸ் இன்பர்மேஷன்' என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. இந்த டிஸ் இன்பர்மேஷன் மிக ஆபத்தானது. இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்த இரண்டும் உலகை அச்சுறுத்தும் ஆபத்தாக மாறும்.
டவுட் தனபாலு: அருமையான விளக்கம், நன்றி... 'தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 10 லட்சத்து, 62,752 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 32 லட்சத்து, 81,032 பேருக்கு வேலைவாய்ப்புஉறுதி செய்யப் பட்டிருக்கு'ன்னு முதல்வர் வெளிநாடு போறப்ப பேட்டி தந்தாரே... அது, மிஸ் இன்பர்மேஷனா, டிஸ் இன்பர்மேஷனா என்ற, 'டவுட்' வருதே!
*********
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன்: வாக்காளர் பட்டியலில் பெயர் காணாமல் போவது என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை பலமுறை நானே கூறியிருக்கிறேன். என் பெயரே காணாமல் போய் இருக்கிறது. ஆனால், பெயர் காணாமல் போனது என்பதற்காக, பெரிதாக வருத்தப்பட தேவையில்லை. பெயரை சேர்க்க வேண்டும் என்றால், மிக எளிதாக சேர்த்துக் கொள்ளலாம்.
டவுட் தனபாலு: அதானே... 'உரிய ஆவணங்களை கொடுத்தால், வாக்காளர் பட்டியலில் மறுபடியும் பெயரை சேர்த்துக்க போறாங்க... இதுக்கு போய், 'ஓட்டு திருட்டு'ன்னு ஒப்பாரி வச்சுட்டு, ஊர் ஊரா போய் பேரணி நடத்தணுமா'ன்னு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை குத்திக் காட்டுறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
*********
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு, குறு தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் 'ஸ்வானிதி' மற்றும் 'முத்ரா' கடனுதவி கிடைக்க, அம்மாவட்ட பா.ஜ., மகளிரணி செயலர் பரமேஸ்வரி முயன்றுள்ளார். இதற்காக, அவரை தகாத வார்த்தை களால் திட்டி, தி.மு.க.,வைச் சேர்ந்த பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி மிரட்டியுள்ளார். தி.மு.க.,வின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் வளர்ச்சி பலியாக வேண்டுமா?
டவுட் தனபாலு: பின்னே, சாலையோர வியாபாரிகளுக்கு நீங்க உதவி பண்ணி, அவங்க ஓட்டுகளை எல்லாம் வளைச்சுட்டா, ஆளுங்கட்சிக்கு தேர்தல்ல நஷ்டமாகிடாதா...? ஆளும் கட்சியை பொறுத்த வரைக்கும், சாலையோர வியாபாரிகள் சாலையோரமா இருக்கும் வரைக்கும் தான், அவங்க வண்டி ஓடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!