PUBLISHED ON : செப் 09, 2025 12:00 AM

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: 'அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிற்கு, 50 சதவீதம் வரி போட்டதால் இந்தியா ஸ்தம்பிக்க போகிறது' என்றனர். நிறைகுடம் தளும்பாது என்பது போல பிரதமர் மோடி அனைத்திற்கும் அமைதி காத்தார். ஜப்பான் பிரதமர், சீன அதிபர், ரஷ்ய அதிபர் ஆகியோரை சந்தித்து பிரச்னையை சுமுகமாக தீர்த்துள்ளார். பாகிஸ்தானுக்கு, 'செக்' வைத்ததோடு, வல்லரசு நாடு என மார்தட்டிய, அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும், 'செக்' வைத்து அமைதியாக மோடி சாதித்துள்ளார்.
டவுட் தனபாலு: 'அமெரிக்காவை நம்பி நாங்க இல்லை' என்பதை பிரதமர் மோடி சத்தமின்றி சாதித்து காட்டியுள்ளார் என்பதில், 'டவுட்'டே இல்லை... நம்ம நாட்டு மக்களும் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க துவங்கிட்டா, அந்த நாட்டின் அதிபர் நம்ம வழிக்கு வந்துடுவார் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
********************
அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் அரசு கொறடா நரசிம்மன்: கடந்த, 1972ல் எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க., 1977ல் இருந்து, தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்தது. அதன்பின், கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா, தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக, அ.தி.மு.க.,வை உருவாக்கினார். தற்போது நான்கு பிரிவுகளாக அ.தி.மு.க., உள்ளதால், தேர்தல்களில் தொடர்ந்து, தோல்விகளை சந்தித்து வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்தால் அமோக வெற்றியை பெறலாம்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஒன்றிணைந்தால் தான் அமோகம் அல்ல, ஆறுதல் வெற்றியாவது கிட்டும் என்பதில், 'டவுட்'டே இல்லை... 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கிடில், அனைவர்க்கும் தாழ்வே' என்ற பாரதியாரின் வரிகள் இன்றைய அ.தி.மு.க.,வுக்கு அட்சரம் பிசகாம பொருந்தும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
********************
தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு செயலர் அருண்ராஜ்: நீண்ட காலத்திற்குப் பின், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜி.எஸ்.டி., வரியை, மத்திய அரசு குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு, 5 சதவீதமா கவும், சிலவற்றுக்கு ஜி.எஸ்.டி., யில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், இத்தனை ஆண்டுகளாக மிக அதிக ஜி.எஸ்.டி., வரியால் எளிய மக்கள் பெரிதும் துன்பப்பட்டனர் என்பதை, மத்திய அரசு ஒப்புக்கொள்கிறதா?
டவுட் தனபாலு: ஜி.எஸ்.டி.,யை அறிமுகப்படுத்தும்போதே, 'சில வருஷங்களுக்கு பிறகு வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்' என்று மத்திய அரசு அறிவிச்சிருந்ததே... எதிர்க்கட்சி என்றால், எல்லாவற்றிலும் குற்றம், குறை கண்டுபிடிச்சுட்டே இருக்கணுமா என்ற, 'டவுட்'தான் வருது!
********************