PUBLISHED ON : அக் 01, 2025 12:00 AM

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்: த.வெ.க., தலைவர் விஜயின் பொறுப்பற்ற தன்மையாலும், தமிழக அரசின் அலட்சியத்தாலும், கரூரில், 41 அப்பாவி மக்களின் உயிர் பறிபோனது, மனதை உலுக்கியுள்ளது. நம்பி வரும் மக்களை வழிநடத்தும் தலைமை பண்பும், ஆற்றலும் கொண்டவரே உண்மையான தலைவர்; நடிகர் விஜயிடம் கட்சியினரை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் இல்லை. அவரது நடவடிக்கைகள் சமூக அக்கறையின்றி இருக்கின்றன.
டவுட் தனபாலு: சினிமாவில் நாலு பேருக்கு நல்லது பண்ணிட்டு, 50 எதிரிகளை போலியா அடிச்சு துவம்சம் பண்ணிட்டாலே, நாடாளும் தகுதி தனக்கு வந்துட்டதாக நடிகர்கள் நினைப்பதும், அதற்கு சிலர் துாபம் போடுவதும் தான், இந்த மாதிரி துயரங்களுக்கு காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
பத்திரிகை செய்தி: துணை முதல்வர் உதயநிதி, குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார். கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தை அறிந்ததும், துபாயில் இருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் வந்தார். பின், கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து, திருச்சி சென்ற அவர், தனி விமானம் மூலம் மீண்டும் துபாய் சென்றார்.
டவுட் தனபாலு: கரூர் துயரம் நடந்ததுமே, முதல்வர் நள்ளிரவே அங்க போய் ஆறுதல் சொல்லிட்டாரு... அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் களத்தில் இருந்தாங்க... தனி விமானம் பிடிச்சு கரூர் வந்துட்டு, மறுபடியும் துபாய் போகும் அளவுக்கு உதயநிதிக்கு என்ன நிர்ப்பந்தம்... நிஜமாகவே ஆறுதல் சொல்றது தானா அல்லது அரசியல் பண்றதா என்ற, 'டவுட்' வருதே!
lll
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம்: தமிழகத்தில், 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல பள்ளிகளுக்கு போதிய கட்டடம் இல்லை; மரத்தடியில் வகுப்புகள் நடக்கின்றன. கேட்டால், 'மத்திய அரசு கல்வி நிதி கொடுக்கவில்லை' என, பஞ்சப்பாட்டு பாடுகின்றனர். ஏழை மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், கல்வி மேம்பாட்டுக்காக மாநில அரசு, தன் சொந்த நிதியையே கொடுக்கலாம்.
டவுட் தனபாலு: மத்திய அரசு, 2,152 கோடி ரூபாய் கல்வி நிதியை தானே தர மறுக்குது... 'டாஸ்மாக்'கில் வருஷத்துக்கு, 50,000 கோடி ரூபாய் சம்பாதிக்கும் தமிழக அரசுக்கு, இந்த தொகை பெருசில்லை தான்... ஆனாலும், மாணவர்கள் கல்வி மீது மாநில அரசுக்கு அக்கறை இல்லையோ என்ற, 'டவுட்' தான் வருது!
lll