PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி: தேர்தலில் போட்டியிடவில்லை என்ற ஒரு காரணத்தை மட்டுமே கூறி, எங்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளனர். ஜனநாயகத்தில் பல தரப்பட்ட மக்களின் உணர்வுகள், கோரிக்கைகள், உரிமைகளை நிலைநாட்டவே, அரசியல் கட்சிகள் துவங்கி நடத்தப்படுகின்றன. தேர்தலில் களம் காண்கிற போது, கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தமும், நெருக்கடியும் ஏற்படுவது இயல்பு; அது தவிர்க்க முடியாதது. அதற்காக, மனிதநேய ஜனநாயக கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என, தேர்தல் ஆணையம் சொல்லும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
டவுட் தனபாலு: 'மக்களுக்காகவே கட்சி நடத்துறோம்'னு சொல்லிட்டு, பெரிய கட்சியின் சின்னத்தில் ஒளிந்து போட்டிடுவதற்கு பதிலாக, அந்த பெரிய கட்சியிலயே, சின்ன கட்சியை இணைச்சிடலாமே... அப்படி பண்ணிட்டா, இந்த மாதிரி பிரச்னை எல்லாம் வரவே வராது என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: த.வெ.க., சார்பில் நான்கு மாவட்டங்களில் கூட்டம் நடந்துள்ளது. அவற்றை ஆய்வு செய்து, போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்களும், குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தை நடத்த வேண்டும். பல மணி நேரம் கழித்து வந்து பேசும்போது பிரச்னை ஏற்படுகிறது. ஆயினும், இந்த நேரத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.
டவுட் தனபாலு: ஆளுங்கட்சியை குறை சொல்ற அதே நேரத்தில், விஜய் கட்சி மீது மட்டும் மயிலிறகால் வருடுவது போல குற்றஞ்சாட்டுவது ஏன்...? தேர்தல் நெருக்கத்தில், கூட்டணி கணக்குகள் எப்படி வேணும்னாலும் மாறலாம் எனும் முன்ஜாக்கிரதையோ என்ற, 'டவுட்' தான் வருது!
lll
-தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: த.வெ.க., தலைவர் விஜய், வார இறுதி நாளில் கூட்டம் நடத்தக்கூடாது. இந்த நாள் விடுமுறை தினம் என்பதால், வீட்டில் உள்ள குழந்தைகளை எல்லாம், மக்கள் கூட்டத்துக்கு அழைத்து வருகின்றனர். அதேபோல, மாவட்டத்தில் ஒரு இடத்தில் மட்டும் பிரசாரம் செய்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதையெல்லாம் விஜய் தீவிரமாக யோசிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: அது சரி... மக்கள் கூட்டம் கூட்டமா வரணும்னு தானே, சினிமாக்களையே வார இறுதி நாட்களா பார்த்து வெளியிடுறாங்க... சினிமாவில் இருந்து வந்த விஜய், அரசியலையும் சினிமாவாகத் தான் நினைக்கிறார் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
lll