PUBLISHED ON : அக் 04, 2025 12:00 AM

காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம்: கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்தில், எல்லா பக்கமும் பிழை உள்ளது. அந்த பிழைகளை எதிர்காலத்திலாவது திருத்தி கொள்ள வேண்டும். இதற்கான என்னுடைய யோசனைகள் அனைத்தையும் தமிழக அரசின் தலைமை செயலருக்கு தெரிவித்துள்ளேன். இதுபோன்று பல யோசனைகள் வரும். அந்த யோசனைகளை எல்லாம் கலந்து, நல்ல முடிவுகளை எடுத்து, அவற்றை அவர்கள் அமல்படுத்த வேண்டும்; செய்வர் என நம்புகிறேன்.
டவுட் தனபாலு: தமிழக அரசுக்கு மட்டும் யோசனைகள் அனுப்பிய நீங்க, த.வெ.க., தலைமைக்கும் உங்க யோசனைகளை அனுப்பியிருக்கலாமே... உங்க தலைவர் ராகுலே, விஜயிடம் பேசிட்ட பிறகு, 'நம்ம யோசனையை எல்லாம் விஜய் கேட்பாரா'ன்னு நினைச்சு அமைதியா இருந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
lll
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: கரூர் துயர சம்பவத்துக்கு பின், தி.மு.க., அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைத்து, இந்த விபத்திற்கான காரணத்தை பிறர் மீது சுமத்த வேண்டும் என்பதே, அரசின் நோக்கம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் துறை செயலர் பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?
டவுட் தனபாலு: ஏதாவது சாதனை படைச்சிருந்தா, அமைச்சர்களும், ஆளுங்கட்சியினரும் நான், நீன்னு விழுந்தடிச்சுட்டு பேட்டிகள் தருவாங்க... கரூர் சம்பவம், மிகப்பெரிய வேதனையாச்சே... அதனால தான், அதிகாரிகளை முன்னாடி தள்ளி விடுறாங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
lll
அகில இந்திய காங்., பொதுச் செயலர் வேணுகோபால்: கரூருக்கு வந்து, உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சில குடும்பங்களை சந்தித்தேன். அவர்கள் அனுபவிக்கும் துயரத்தை, வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நாங்கள் அரசியல் ரீதியாக பழிசுமத்தும் விளையாட்டை விளையாட விரும்பவில்லை. தமிழக மக்களுடன் நிற்க விரும்புகிறோம். எதிர்க்கட்சி தலைவர் ராகுல், எப்போதும் தமிழக மக்களுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பார்.
டவுட் தனபாலு: 'கரூர் சம்பவத்துக்கு முழுக்க முழுக்க த.வெ.க.,தான் காரணம்' என்று தி.மு.க., தரப்பு குற்றம் சாட்டுது... அவர்களின் பிரதான கூட்டணி கட்சியான நீங்க அதற்கு ஒத்து ஊதாமல், தனி ஆவர்த்தனம் பண்றீங்களே... வெளிநாட்டில் இருந்தபடியே ராகுல் வேற விஜயிடம் போன்ல, 15 நிமிஷம் பேசி ஆறுதல் சொல்றாரு... கூட்டணி கணக்குகளை மாத்தும் ஐடியா ஏதும் இருக்கோ என்ற, 'டவுட்'தான் வருது!
lll